Amazing Tamilnadu – Tamil News Updates

சென்னையில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் முதியோருக்கான மருத்துவ மையம்… என்னென்ன வசதிகள், சிறப்புகள்?

சென்னை, கிண்டியில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் முதியோர் நல மருத்துவ மையம் திறந்து வைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 430 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அர்ப்பணித்தார். தற்போது அதே மருத்துவமனையில், தேசிய முதியோர் நல மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் ஆட்சியில் இருந்த போது முதியோர் நல மருத்துவ மையம் அறிவிக்கப்பட்டது, முதியோர் மருத்துவமனை என்றால் பெரிய அளவில் இடம் வேண்டும் என்ற நோக்கத்தில் அது இங்கு, கிண்டியில் அமைக்கப்பட்டது.

இந்த கட்டிட பணி 2019 ஆம் ஆண்டில் முடிவுற்ற நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் சிகிச்சை அளிக்க இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தம் மற்றும் கோரிக்கையைத் தொடர்ந்து, முதியோர் நல மருத்துவ மையத்தை, பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதன் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி மருத்துவ மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

குறைந்த கட்டணம்

200 படுக்கைகள் மட்டுமல்லாமல் 40 தீவிர சிகிச்சை படுக்கைகள், 20 கட்டணப்படுக்கைகள் என்கின்ற வகையில் கட்டண அறைகளும் உள்ளன. இந்த கட்டணப் படுக்கைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதன அறை, தொலைக்காட்சிப் பெட்டி, ஷோபா, மேசை மற்றும் நாற்காலி, பீரோ போன்ற வசதிகளுடன் ஒவ்வொரு அறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதி நவீன சிகிச்சை வசதிகள்

பிரத்யேக நோய்களுக்கான அறிவுத்திறன் குறைபாடு மற்றும் நிலை தடுமாறி விழுதல், எலும்பு தேய்மானம் சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல், நாள்பட்ட வலி உள்ளிட்ட வகைகளுக்கு கண்டறியும் சிகிச்சை எனப் பல்வேறு சிகிச்சைகளுக்காக 24 மணி நேரமும் இம்மருத்துவமனை இயங்கும். கண் காது மூக்கு அறுவை சிகிச்சை, தொண்டைகள், சிறுநீரக அறுவை சிகிச்சைகள் போன்ற முக்கிய சேவைகளும் இந்த மையத்தில் முதியவர்களுக்கு அளிக்கப்பட இருக்கிறது. மேலும், பல அதிநவீன வசதிகளும் இந்த மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளன. இந்த மருத்துவமனை பல்வேறு புதிய வசதிகளுடன் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

விளையாட்டு, நூலக வசதி

முதியோர்களைப் பொறுத்தவரை, மருத்துவத்திற்கு வருபவர்கள் பார்வை திறன் குறைபாடு, ஞாபக சக்தி போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கான வருபவர்கள் 24 மணிநேரமும் படுக்கை அறைகளில் தங்குவது அவசியமற்ற ஒன்று என்பதால், அவர்கள் மாலை நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் வசதியாக நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

நூலகம் மட்டுமல்லாமல் அவர்கள் ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும்வகையில் கேரம் போர்டு, செஸ் பலகைகள், பல்லாங்குழி போன்ற தமிழர்களின் விளையாட்டுகள் தொடர்பாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது

Exit mobile version