சென்னை மாநகராட்சி பட்ஜெட்: வருவாய் அதிகரித்து பற்றாக்குறை குறைந்தது!
சென்னை மாநகராட்சிக்கான 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் நிகர பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, வருவாயும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரையிலான பட்ஜெட் மதிப்பீட்டு ஆவணங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2024-25 ஆம் நிதியாண்டில் நிகர பற்றாக்குறை மிகக் குறைவாக உள்ளது. அதே சமயம், வருவாய் வரவுகள் கடந்த ஐந்தாண்டுகளில், தற்போது அதிகபட்சமாக ரூ. 4,464.60 கோடியாக உள்ளது. இருப்பினும், இந்த நிதியாண்டின் மூலதன வரவுகள், கடந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டான ரூ. 3,554.5 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ. 3,455 கோடியாகக் குறைவாக உள்ளது.
மேலும், கடன் மூலமான வருவாயை பூஜ்ய இலக்காக கொண்டுள்ள சென்னை மாநகராட்சி பட்ஜெட், ரூ. 231.15 கோடி மதிப்புள்ள கடன்களை திருப்பிச் செலுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் பட்ஜெட் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் வரவுகள்
வருவாய் வரவுகள் கணக்கை எடுத்துக்கொண்டால், 2020-21 ல் ரூ.3081.21 கோடி, 2021-22 ல் 2935.26 கோடி, 2022-23 ல் ரூ. 2824.77 கோடி, 2023-24 ல் ரூ. 4131.7 கோடி, 2024 – 25 ஆம் நிதியாண்டில் 4464.6 கோடியாகவும் உள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீடுகள்
இந்த ஆண்டு, சென்னை மாநகராட்சியின் மிகப்பெரிய ஒதுக்கீடு மழைநீர் வடிகால்களை அமைப்பதற்காக உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி மூலம் கொசஸ்தலையாறு படுகையில் மேற்கொள்ளப்படும் புயல் நீர் வடிகால் பணிகளுக்காகவும், கேஎஃப்டபிள்யூ (ஜெர்மன் வங்கி) மூலம் கோவளம் பேசின் மற்றும் பல பகுதிகளில் மூலம் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ1,321 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கார சென்னை 2.0 மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (NSMT) ஆகியவற்றின் கீழ் சாலைகளை மறுசீரமைக்க ரூ. 390 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி, சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் NSMT மூலம் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பணிகள் மற்றும் இதர மூலதனப் பணிகளை மேற்கொள்ள, நகரத்தில் உள்ள 15 மண்டலங்களில் ஒவ்வொன்றுக்கும் நிதி ரூ 392.53 என ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.