சென்னை மாநகரைப் பொறுத்தவரை பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் ஆகியவைதான் பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு முக்கிய சேவை ஆற்றி வருகின்றன. குறிப்பாக அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்வோரில் ஏராளமானோர் புறநகர் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி உட்பட பல்வேறு வழித்தடங்களில், தினமும் 550 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து, ரயில்களில் தினமும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இவர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்குச் செல்ல ரயில் மற்றும் பேருந்து அல்லது பேருந்து மற்றும் ரயில்களில் மாறி மாறிச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு செல்ல நேரிடும்போது டிக்கெட் எடுப்பதற்காக ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. அதேபோன்று பேருந்தில் பயணித்தாலும் கூட்ட நெரிசலில் டிக்கெட் எடுப்பது மிகுந்த சிரமமான ஒன்றாக உள்ளது. மேலும், சில்லறை காசுகள் பிரச்னைக்காகவும் கண்டர்களுடன் சில சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதுபோன்ற சிரமங்களுக்குத் தீர்வு காணும் விதமாக, ‘ஒரே டிக்கெட்டில் ரயில் மற்றும் பேருந்து பயணங்களை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது.
ஒரே டிக்கெட்டில் மூன்று வகை பயணம்
அதன்படி, இக்கோரிக்கையைச் செயல்படுத்தும் விதமாக சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில், மெட்ரோ ரயில் உட்பட மூன்று வகையான போக்குவரத்தில் பயணம் செய்யும் திட்டத்திற்கான செயலியை உருவாக்க, Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கியுள்ளது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்.
முதற்கட்டமாக நடப்பாண்டு டிசம்பர் மாதத்தில், சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒருங்கிணைந்த டிக்கெட் மூலம் பயணம் செய்யவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் இணைத்து பயணம் மேற்கொள்ளவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக, பொதுப் போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் முறையைக் கொண்டு வர வேண்டும் எனத் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இது தயாராகி விட்டால், ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தி பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் ஆகிய மூன்றிலும் பயணிக்க வசதியாக கார்டு போன்ற பாஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்தகைய கார்டை பொதுமக்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீசன் டிக்கெட் பெற மொபைல் எண்
இதனிடையே சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க சீசன் டிக்கெட் பெறவோ அல்லது கவுன்டர்களில் புதுப்பிக்கவோ வரும் முன்பதிவில்லாத பயணியரிடம், மொபைல் எண்ணை சேகரிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில், 160 கி.மீ., வரை, சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த வகையில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர், சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீசன் டிக்கெட்டுகளைப் பெறவோ அல்லது கவுன்டர்களில் புதுப்பிக்கவோ வரும் முன்பதிவில்லாத பயணியரிடம், மொபைல் போன் எண்ணை சேகரிக்க, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் பெறும் பயணியரிடம், மொபைல் போன் எண்கள் பெறப்பட்டன.தற்போது, முன்பதிவு செய்யப்படாத பயணியரிடமிருந்தும் மொபைல் போன் எண்ணை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.