Amazing Tamilnadu – Tamil News Updates

‘சென்னை சங்கமம்… நம்ம ஊரு திருவிழா’… கொண்டாட நீங்க தயாரா?

விழாக்களும் பண்டிகைகளும் தான் மக்களை ஒருங்கிணைக்கின்றன. அத்தகைய தருணங்களில் கலை விழாக்களும் இடம்பெற்றால் கொண்டாட்டங்களுக்கும் குதூகலத்துக்கும் கேட்கவா வேண்டும்? அந்த வகையில், வழக்கம்போல இந்த ஆண்டும் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மக்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது ‘ சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற கலை விழா.

நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் ‘சென்னை சங்கமம்.. நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, பாரம்பரிய தமிழ் கலையை மக்களிடையே ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் விதமாக, அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழாவைச் சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். அதற்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வந்த அவ்விழா, 2011 ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்படவில்லை. 2021 ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த விழா மீண்டும் நடைபெற்று வருகிறது.

சென்னை உட்பட 9 மாவட்டங்களில் ‘நம்ம ஊரு திருவிழா’

தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30க்கும் மேற்பட்ட கலைவடிவங்கள் இடம்பெறும் வகையில், இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இக்கலைவிழாவின் வாயிலாக, சுமார் 3000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறுவர்.

மேலும், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, மெல்லிசை நிகழ்ச்சிகள் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பஞ்சாப், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், 2023-2024 ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையோடு சேர்த்து, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் “சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’வினை நடத்திட ரூ.9.90 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னையில் 18 இடங்கள்… எங்கெல்லாம்?

இதன்படி, இந்த ஆண்டு அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில், ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலைவிழா, வருகிற 13 ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவுத்திடல், மாநகராட்சி விளையாட்டு மைதானம், கொளத்தூர், முரசொலிமாறன் மேம்பால பூங்கா (தெற்கு), பெரம்பூர், ராபின்சன் விளையாட்டு மைதானம், இராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, மைலாப்பூர், செம்மொழிப் பூங்கா, மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், பாரத சாரண சாரணியர் திடல், திருவல்லிக்கேணி, மாநகராட்சி மைதானம், நடேசன் பூங்கா எதிரில், தி.நகர், எலியட்ஸ் கடற்கரை,

பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், சைதாப்பேட்டை, சிவன் பூங்கா, கே.கே.நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம், பழனியப்பா நகர், வளசரவாக்கம், கோபுரப்பூங்கா, அண்ணா நகர், ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு, எஸ்.வி. விளையாட்டு மைதானம், அம்பத்தூர், அரசு அருங்காட்சியகம், எழும்பூர் ஆகிய 18 இடங்களில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

உணவுத் திருவிழா, உறியடி

இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில், உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கருத்தரங்கம், கவியரங்கம், நாடகம் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் முன்னனி இலக்கிய ஆளுமைகள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். மேலும், ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள் போன்ற கலைப்படைப்புகள் அடங்கிய கண்காட்சியும் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். மக்கள், விரும்பிய கலைப்படைப்புகளை வாங்கிச் செல்லும் வகையில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.

அப்புறம் என்ன மக்களே… பொங்கல் பண்டிகையுடன் ‘சங்கமம்… நம்ம ஊரு திருவிழா’வையும் கொண்டாட தயாராகுங்க..! எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம்!

Exit mobile version