பொறியியல் படிப்பில் சென்னை ஐஐடி-க்கு எப்போதுமே தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. இங்கு படித்து முடித்து வெளிவருபவர்களில் பெரும்பாலானோர் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக தேர்விலேயே பல முன்னனி நிறுவனங்களால் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
அந்த வகையில், 2024 ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி, சென்னை ஐஐடி-யில் நடப்பாண்டில் 80 சதவீத்திற்கும் மேற்பட்ட பிடெக், இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 75 சதவீதத்திற்கும் அதிகமான முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக (campus interview) தேர்வுகளின்போது, 256 நிறுவனங்களில் 1,091 பேர் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர, மொத்தமுள்ள 300 முன்வேலைவாய்ப்பு பணிகளுக்கு 235 பேர் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இப்படியான வேலைவாய்ப்புகள் கிடைப்பதால் ஐஐடி படிப்பில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் அவர்கள் JEE Main மற்றும் JEE Advanced ஆகிய இரு போட்டித் தேர்வுகளை எழுத வேண்டி உள்ளது. இத்தேர்வுக்குத் தயாராக கடுமையான உழைப்பும் முயற்சியும் தேவை என்ற நிலையில், படிப்பு ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தும் மாணவர்கள் மட்டுமே இதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஐஐடி-யில் சேர முடியும் என்ற நிலை காணப்பட்டது.
‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’
அதே சமயம் விளையாட்டு மற்றும் இசை, நடனம், பாடல் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஐஐடி-யில் சேர விரும்பினால், அதற்கு அவர்கள் தங்களிடம் உள்ள இத்தகைய தனித்திறனில் கவனம் செலுத்த முடியாத நிலை இருந்ததால், அத்தகைய மாணவர்கள் ஐஐடி-யில் சேருவது அரிதாக இருந்து வந்தது.
இந்த நிலையில், இத்தகைய நிலையைப் போக்கும் வகையில், சென்னை ஐஐடி முதல் முறையாக அதன் இளநிலை படிப்புகளுக்கு மதிப்பெண்களைக் கடந்து, விளையாட்டு இடஒதுக்கீடு (‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’) அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து இருந்தது. இதுவரையில் இந்தியாவில் உள்ள எந்த ஐஐடி-களும் ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’ முறையை அறிமுகப்படுத்தாத நிலையில், சென்னை ஐஐடி-யின் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. மேலும், ஸ்போர்ட்ஸ் கோட்டவை அறிமுகப்படுத்தும் முதல் ஐஐடி என்ற பெருமையும் சென்னை ஐஐடி-க்கு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் SEA – SPORTS EXCELLENCE ADMISSION எனத் தொடங்கப்பட்டு, இந்த முறையின்படி சிறப்புமிக்க இரண்டு இடங்களாகப் பிரிக்கப்படும். அதில் மகளிருக்கென ஒரு இடமும், தேசிய அளவில் வெற்றிடங்களை தயார்படுத்த பொது பிரிவினருக்கென ஒரு இடமும் வழங்கப்படும் என்றும் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி உறுதிபடுத்தியுள்ளார். SEA-வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் JEE (advanced) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Joint Seat Allocation Authority (JoSAA) என்ற போர்டல் மூலம் இல்லாமல், சென்னை ஐஐடியால் இயக்கப்படும் இணையதளம் மூலம் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
‘கலாச்சார கோட்டா’வும் அமலாகிறது
இந்த நிலையில், ஐஐடி படிப்புகளில் விளையாட்டு இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து விரைவில்’கலாச்சார கோட்டா’ ( Cultural quota ) வையும் அமல்படுத்த உள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறியுள்ளார்.
“சென்னை ஐஐடியில் வழங்கப்படும் படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளோம். இதேபோல், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் கலாச்சார இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்படும். இது எனது செயல்திட்டங்களில் ஒன்று. இந்த ஒதுக்கீடு மூலம் இசை, நடனம், பாடல் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பயன்பெறுவர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அதே சமயம், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் போன்றே, இந்த ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற விரும்புவோர், JEE Advanced தேர்வில் பங்கேற்று பொது தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா தொடங்கி வைக்கும் SPIC MACAY மாநாடு
இதனிடையே, சென்னை ஐஐடி உருவாக்கி உள்ள இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தின் ( SPIC MACAY) 9 ஆவது ஆண்டு சர்வதேச மாநாடு, வருகிற 20 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், பொம்மலாட்டம் மற்றும் நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட இந்திய கலை வடிவங்கள் இடம்பெற உள்ளன.
ஒரு வார காலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 1,500 மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள். மே 20 ஆம் தேதி தொடங்கும் இம்மாநாட்டை, இசைஞானி இளையராஜா தொடங்கி வைக்க இருப்பதாக காமகோடி தெரிவித்துள்ளார்.