தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திகழும் எழும்பூர் ரயில் நிலையம், தமிழ்நாட்டு மக்களின் மறக்க இயலாத அடையாளங்களில் ஒன்று. எத்தனையோ கனவுகளை சுமந்துகொண்டு கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து பயணித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் வந்திறங்கிய லட்சக்கணக்கானோரால் விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம்.
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல தொலைதூர ஊர்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒருபுறம் இயக்கப்படுகிறதென்றால், இன்னொருபுறம் சென்னை தாம்பரம் – கடற்கரை இடையேயான புறநகர் ரயில்கள் எனப்படும் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.
மறுசீரமைக்கும் பணி
இந்த நிலையில், தமிழ்நாட்டின் அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழும் இந்த ரயில் நிலையத்தை, ரூ.735 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தப் பணி தற்போது வேகமெடுத்துள்ளது. காந்தி இர்வின் சாலையை ஒட்டி இருந்த ரயில்வே குடியிருப்பு, ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த ரயில்வே அலுவலகம் ஆகியவை ஏற்கெனவே இடிக்கப்பட்டது. இங்கு ரயில் நிலைய கட்டடங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, எழும்பூர் வடக்கு பகுதியில் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த டிக்கெட் கவுன்டர்கள் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக, பூந்தமல்லி சாலையை ஒட்டிய பகுதியில் உள்ள எழும்பூர் ஆர்.பி.எஃப் அலுவலகம் வளாகத்திற்கு தற்காலிகமாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள், “எழும்பூர் ரயில்நிலையத்தில் 10,11- வது நடைமேடையையொட்டி, பூந்தமல்லி சாலை பக்கத்தில் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் பதிவு மையம் செயல்பட்டது.
டிக்கெட் முன்பதிவு மையம் இடம்மாற்றம்
இந்த டிக்கெட் முன்பதிவு மையம் தற்காலிகமாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி சாலையில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் டிக்கெட் பதிவு மையம் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் தலா 3 முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படுகின்றன. மொத்தம் 15 பணியாளர்கள் 8 மணி நேர ஷிஃப்டு அடிப்படையில், பணியில் இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த இடமாற்றம் குறித்து ரயில்வே தரப்பில் முன்கூட்டியே எதுவும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று முதல் அமலான இந்த திடீர் மாற்றம் குறித்து ரயில் நிலைய நுழைவாயிலோ அல்லது ரயில் நிலைய நடைமேடைகளிலோ தகவல் பலகை எதுவும் வைக்கப்படாததால் தாங்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானதாக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.