சுகாதாரத்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்ச்சிக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மாதா மாதம் அவற்றின் செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில், மாதா மாதம் அவற்றின் 20 முக்கிய செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை கண்காணித்து, அதன் அடிப்படையில் அவற்றை தரவரிசைப்படுத்தும் அரசின் இந்த செயல் சுகாதாரத்துறையைச் செதுக்கும் அணுகுமுறையாகவே கருதப்படுகிறது. இந்த அணுகுமுறை, முக்கியமான சுகாதார நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இது வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழக்கத்திற்கு மாறான ஓர் அணுகுமுறையாகவும் உள்ளது எனலாம்!
இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் என்ன என்பது குறித்து விவரிக்கும் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், “ஆரம்ப சுகாதார நிலையங்களை தரவரிசைப்படுத்துவதன் மூலம், அவற்றின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை கண்டறிந்து, எதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்” என்கிறார்.
PHC எனப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசை அளவுகோல்களுக்கான 20 குறிகாட்டிகள் (Indicators), தாய் சேய் ஆரோக்கியம் முதல் தொற்றாத நோய்கள் வரையிலான சுகாதாரப் பாதுகாப்பின் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளன.
குறிப்பாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களைக் கண்டறியும் மருத்துவ பரிசோதனைக்கான இடைவெளிகள், மாதந்தோறும் பரிசோதிக்கப்பட வேண்டிய இலக்குகளில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற நோய் தாக்கம் கொண்ட புதிய நோயாளிகள் எண்ணிக்கை, பிரசவத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய பதிவு சதவிகிதம், பிரசவத்துக்கு முன்னர் பெண்களுக்கு வழங்கப்படும் ஃபோலிக் அமிலத்தின் சதவிகிதம், குறைந்த பிறப்பு எடையின் சதவிகிதம் மற்றும் முழுமையாக நோய்த்தடுப்பு பெற்றவர்களின் சதவிகிதம் ஆகியவை தரவரிசை அமைப்பில் உள்ள மற்ற குறிகாட்டிகளாக கணக்கில் கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டின் அரசின் இந்த கொள்கை, எந்த ஓர் அரசும் சுகாதாரத்துறையில் பின்பற்றக்கூடிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளை உள்ளடக்கியுள்ளதாகவும், சுகாதார மதிப்பீட்டிற்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகவுமே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆற்றல் மிக்க தலைமைக்கும், தி.மு.க அரசின் சிந்தனைமிக்க கொள்கை வகுக்கும் திறனுக்குமான மற்றொரு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.