Amazing Tamilnadu – Tamil News Updates

சுகர், பி.பி… லட்சக்கணக்கானோரை ‘அலர்ட்’ செய்த ‘மக்களைத் தேடி மருத்துவம்’!

மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தொடங்கிய பல்வேறு திட்டங்களில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் சிறப்பானதொரு திட்டம் எனும் சொல்லும் வகையில், நோய் தாக்குதலுக்கு உள்ளான சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பேர் கண்டறியப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மக்களின் வீட்டிற்கே மருத்துவத்தைக் கொண்டு செல்லும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் முதற்கட்டமாக 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 21 நகர ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வந்தது.

வீடு தேடிச் செல்லும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’

ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருக்கிற முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘செவிலியர், இயன்முறை மருத்துவர், ஓட்டுநர், மிட் லெவல் ஹெல்த் ப்ரொவைடர், பெண் சுகாதார தன்னார்வலர்’ அடங்கிய ‘மக்களைத் தேடி’ மருத்துவக் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இதில் பெண் சுகாதார தன்னார்வலர்கள், ஒவ்வொரு கிராமமாகச் சென்று, வீடு வீடாகப் போய்… ‘யாருக்கெல்லாம் ரத்தக் கொதிப்பு இருக்கிறது… சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது… வேறு ஏதேனும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? யாருக்கேனும் கேன்சர் நோய் இருக்கிறதா? பக்கவாதம், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார்களா?’ என பரிசோதனை செய்கிறார்கள்.

பெரும்பாலான உடல்நிலை பிரச்னைகளுக்கும் ஒருவரை திடீரென படுத்தப் படுக்கையாக ஆக்கிவிடுவதற்குமான தன்மை ‘ரத்த அழுத்தம்’ மற்றும் சர்க்கரை நோய்களுக்கு உண்டு. காலில் ஏற்பட்ட சிறிய கொப்புளமோ.. காயமோ ஒருவரின் காலை நீக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிவிடுகிறது சர்க்கரை நோய். ஒருவரது மூளை நரம்பில் திடீரென ஏற்பட்டும் அடைப்போ, ரத்தக் கசிவோ அவரது கை கால்களை செயலிழக்கச் செய்து… வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாக்கி விடுகிறது ரத்த அழுத்த பிரச்னை.

இப்படியான பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படாமல் இருக்கவும், இப்படியான பாதிப்புகளில் சிக்கி தவித்து வரும் நோயாளிகளுக்கும்… மாத்திரை மருந்துகளை வழங்குவதோடு… அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான இயன்முறை பயிற்சி… படுக்கைப் புண் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு செவிலியரின் உதவி போன்றவை மக்களைத் தேடி மருத்துவத்தின் மூலம் கிடைக்கிறது.

லட்சக்கணக்கான சுகர், பிபி நோயாளிகள்

அந்த வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் (MTM) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை, 55.1 லட்சம் புதிய உயர் ரத்த அழுத்தம் நோயாளிகளும், 31.53 லட்சம் சர்க்கரை நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டு பாதிப்புக்கும் உள்ளான 26.15 லட்சம் பேரும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் MTM திட்டத்தின் நோடல் அதிகாரியான டாக்டர் பிரியா பசுபதி.

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தரவுகளின்படி, இத்திட்டத்தின் கீழ் இதுவரை 112.78 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். MTM-ன் கீழ், பெண் சுகாதார தன்னார்வலர்கள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் மற்றும் பிற தொற்றாத நோய்களைப் பரிசோதிப்பார்கள். புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இந்த நோயாளிகளுக்கு பின்தொடர்தல் பராமரிப்புக்காக மருத்துவ ஆலோசனை உறுதி செய்யப்படும்.

நோயறிதலில் செய்யும் தாமதம் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும். பல சந்தர்ப்பங்களில், மாரடைப்பு ஏற்பட்ட பின்னரே மக்கள் உயர் ரத்த அழுத்தம் உள்ளதாக அறிந்து கொள்கிறார்கள். எனவே 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருடாந்திர பரிசோதனை அவசியம். சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று அவர்களின் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வது அவசியம். அப்போதுதான் சிக்கல்களைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலும், “தேவையான அனைத்து மருந்துகளும், நோயறிதல் பரிசோதனைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. எனவே மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி, உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைத்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற உடல் செயல்பாடுகள் வாழ்க்கைமுறைக் கோளாறுகளைக் கட்டுப்படுத்த உதவும்” என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்..!

‘வரும் முன் காத்தல்’ வாழ்க்கைக்கு மட்டுமல்ல… உடலுக்கும் நல்லது!!!

Exit mobile version