தோளில் துண்டு அணிவதும், பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்க அவர்களுக்கு சால்வை அணிவிப்பதும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களாக மாறி பல தசாப்தங்களாகி விட்டது. தோளில் துண்டு போட்டுக்கொள்வது இன்று நகரங்களில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் கிராமங்களில் இன்றும் வயதில் மூத்த ஆண்களும் வயல்களில் வேலை பார்க்கச் செல்பவர்களும் அணியத்தான் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் திருமணம் போன்ற சுப காரியங்களில் கலந்துகொள்ளச் செல்லும்போதும் சற்று உயர்ந்த ரகத்திலான துண்டைத் தோளில் அணிந்து செல்வது உண்டு. அதேபோன்றுதான் சால்வையும். சமயங்களில் இந்த சால்வையே தோள் துண்டாகத்தான் இருக்கும்.
இந்த சால்வையைத்தான் ஒருவர் தனக்கு அணிவிக்க வந்தபோது, அதனை ஏற்க மறுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வசைபாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொள்ளச் சென்றார். காரில் இருந்து இறங்கிய அவர் இறங்கியபோது, ஒருவர் சீமான் அருகே சென்று சால்வை அணிவிக்க முயன்றார். ஆனால் அதை ஏற்க மறுத்த சீமான், அதை தட்டிவிட்டபடியே, “பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. இதை ஒரு பழக்கம் என்று வைத்துக்கொண்டு அலைகிறார்கள்…” என்றபடியே கடந்து சென்றார்.
சீமானின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனமும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அது குறித்த காரசார விவாதங்களும் அரங்கேறி வருகின்றன. ஒரு நிகழ்வில் சீமானுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சால்வை அணிவிக்கும் வீடியோ காட்சியைப் பதிவிட்டு, “அப்போது இளையராஜாவிடம், ‘சால்வை வேண்டாம்’ என்று சொல்லி இருக்க வேண்டியதுதானே…?” எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சால்வையால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லையா..?
சீமான் சொல்வது போன்று அந்த சால்வையால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லையா..?- பண மதிப்பின்படி பார்த்தால் அதன் மதிப்பு நூறு, இருநூறு ரூபாய்க்குள்தான் இருக்கும். ஆனால் இந்த தோள் துண்டும் சால்வையும் திராவிட இயக்கங்களின் வருகைக்கு முன்னர் எல்லோராலும் அணிய முடிவதாகவா இருந்தது..? சாதிய பெருமையையும் பண்ணையார்களின் பவுசுகளையும் ஊருக்கு காண்பிக்கும் அடையாளமாகவும், அவர்களின் எதிரே சாமான்யர்களும் குடியானவர்களும் தோள் துண்டை இடுப்பில் கட்டியோ அல்லது கக்கத்தில் வைத்தோ நிற்கும் அவல நிலைமையின் சாட்சியமாக அல்லவா இருந்தது. சாதிய படிநிலைகளைச் சொல்லும் நால் வருண அடுக்கில், ‘உன்னை விட நான் மேலானவன்…’ எனத் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமையாக கருதும் அந்த அடையாளத்தை அடித்து நொறுக்கி, ‘அனைவரும் தோளில் துண்டு அணியலாம், அது ஒவ்வொருவரின் உரிமை, விருப்பம்’ எனக் குரலெழுப்பி, அதை ஒரு மக்கள் இயக்கமாக, உரிமை போராட்டமாக நடத்தி சாத்தியமாக்கியது திராவிட இயக்கங்கள் அல்லவா..?
நாதசுர வித்வானுக்காக எழுந்த பெரியாரின் உரிமைக்குரல்
“அது 1923-ஆம் ஆண்டு… அது 1923-ஆம் ஆண்டு… சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்பற்றி முடிவெடுக்க தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கானாடு காத்தானில் சுயமரியாதை இயக்க வீரர் வை.சு. சண்முகம் இல்லத்தில் கூடியிருந்தனர். அன்று அந்தவூரில் ஒரு செட்டியார் வீட்டுத் திருமணம் – திருமண ஊர்வலத்தில் அந்தக் காலத்தில் பேர் பெற்ற நாதசுர வித்வானான சிவக்கொழுந்துவின் நாதசுர இசை இடம் பெற்றிருந்தது.
நாதசுரவித்வான் இடுப்பில் ஜரிகைக்கரை பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, வியர்வையைத் துடைப்பதற்காக தோளில் துண்டு ஒன்றைப் போட்டு இருந்தார். அந்த நேரத்தில் நாட்டுக் கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்த வாலிபன் ஒருவன் நாதசுர வித்வான் சிவக்கொழுந்து அவர்களின் எதிரே வந்து, ‘தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும். மரியாதை இல்லாமல் துண்டைத் தோளில் போட்டுக் கொள்ளக் கூடாது!’ என்று ஆணவமாக அரற்றினார். நாதசுர மேதை சிவக்கொழுந்து அவர்களோ மிகவும் அடக்கமாக ‘அய்யா இது ஒன்றும் அங்கவஸ்திரம் அல்ல – நாதசுரம் வாசிக்கும் பொழுது அதிகமாக வியர்க்கும், அதைத் துடைத்துக் கொள்ளத்தான் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டுள்ளேன்’ என்று கூறியபிறகும் அந்த ஆசாமி விடுவதாகயில்லை.
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த சுயமரியாதை வீரர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி எழுந்து, ‘சிவக்கொழுந்து துண்டை எடுக்காதே! நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்!’ என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார். மேலும், இந்தத் தகவலை வை.சு. வீட்டில் இருந்த தந்தை பெரியாரிடம் ஓடிப் போய்த் தெரிவித்தார் பட்டுக்கோட்டை அழகிரி. தந்தை பெரியார் அவர்களும் அழகிரியிடம், ‘விடாதே, துண்டை எடுக்காமல் வாசிக்கச் சொல்; கல்யாண வீட்டார் அனுமதிக்கா விட்டால், அவரை இங்கே அழைத்து வாருங்கள்; வாசிக்கச் சொல்லி அவருக்கு உள்ள பணத்தை நாம் கொடுத்து விடலாம்!’ என்றார். அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குக் கேட்க வா வேண்டும் – சிட்டாகப் பறந்து அந்த இடத்திற்குச் சென்று மீண்டும் ஓங்கித் தன்மானக் குரல் கொடுத்தார். திருமண வீட்டார், பெரியார் இருந்த இடத்திற்கே வந்து கெஞ்சினார்கள்.
‘சாதி திமிரில் நீங்கள் நடந்துத் கொள்வதற்கெல்லாம் நாங்கள் பணிந்து போக வேண்டுமா? நாங்கள் சிவக் கொழுந்தை அழைத்துக் கொள்கிறோம்.
நாதசுரம் இல்லாமல் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளுங்கள்…’ என்று கறாராகக் கூறி விட்டார் தந்தை பெரியார். மேள தாளம் இல்லாமல் கல்யாண ஊர்வலம் செல்வது கவுரவக் குறைவு என்று கருதிய திருமண வீட்டார், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ‘சிவக்கொழுந்து துண்டைத் தோளில் அணிந்து கொண்டுதான் நாதசுரம் வாசிப்பார். விருப்பம் உள்ளவர்கள் இருங்கள்! பிடிக்காதவர்கள் சென்று விடுங்கள்’ என்று கூறி விட்டனர். வித்துவான் சிவக்கொழுந்து துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்” என கவிஞர் கலி.பூங்குன்றன் தான் எழுதிய “திராவிட இயக்கத்தின் திருவிழா என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட இயக்க தலைவர்கள் செய்த புரட்சி
இந்த நிகழ்வைத் தொடர்ந்துதான் திராவிடர் கழக மேடைகளிலும், அதன் பின்னர் உருவான திராவிட முன்னேற்றக் கழக மேடைகளிலும், சுயமரியாதை இயக்க திருமணங்களிலும் சாதிய பேதமின்றி மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் ‘பொன்னாடை’ போர்த்துவதாக தோளில் துண்டு அணிவித்தார்கள். அந்த இயக்கங்களில் இருந்த சிறு தலைவர்கள் கூட சாதிய, பொருளாதார பேதமின்றி நீளமான துண்டுகளை அணிந்தார்கள். இது, அன்றைய காலங்களில் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் உயர் சாதியரின் இயக்கமாக இருந்த காங்கிரஸ் போன்ற இயக்கங்களுக்கு மாற்றாக பெரும் புரட்சிகர கருத்தாக ‘சால்வை’ அணிவித்தல் நிகழ்வுகளை மேடை தோறும் நிகழ்த்தினார்கள். அவர்கள் அணிவித்த சால்வைகள், சாமான்யனையும் துண்டை கக்கத்திலிருந்தும் இடுப்பிலிருந்தும் தோளில் அணிய செய்தது. அந்த காலகட்ட புகைப்படங்களைப் பார்த்தால் தோளில் நீண்ட நெடிய துண்டுடன் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஈ.வி.கே. சம்பத், நடராசன், மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற முன்னோடி தலைவர்கள் பல்வேறு மேடைகளில் காட்சியளிப்பதைப் பார்க்க முடியும்.
அதிலும் அண்ணா மேடைகளில் பேசும்போது தோளில் கிடக்கும் துண்டை எடுத்து லாவகமாக மறைத்தபடியே மூக்குப் பொடியைப் போட்டுக்கொள்வது வெகு பிரசித்தம். அதே போன்று கலைஞர் கருணாநிதி 69,70களில் தமிழகத்தின் முதல்வராக பல்வேறு நிகழ்ச்சிகளில், வித்தியாசமாக நடுவகிடு எடுத்து சீவிய தலையுடன், தோளில் கிடக்கும் துண்டு தரையில் தவிழ, வீறு நடையுடன் வரும் காட்சிகளும், பின்னர் முகத்தில் ஏற்பட்ட பிரச்னைக்காக மஞ்சள் துண்டு அணிந்து, பின்னர் அதுவே கடைசி வரை அவரது அடையாளமானதும் தமிழர்களின் மனதிலிருந்து அகற்ற முடியாத காட்சிகள். கலைஞர் மட்டுமல்ல எம்ஜிஆர் கூட திமுகவிலிருந்தபோதும் சரி… அதன் பின்னர் அதிமுகவைத் தொடங்கியபோதும் தோளில் சிறிய துண்டை அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோன்றுதான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாஞ்சில் சம்பத் போன்ற திராவிட இயக்க வழி வந்த மேலும் பல தலைவர்களும் மேடைகளில் முழங்குவதை பார்த்திருக்கலாம். அவ்வளவு ஏன்… 2021 ல் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இதன் அடையாளங்களைக் காணலாம். திமுக-வைச் சேர்ந்தவராக காட்டப்படும் பசுபதி மற்றும் சில கேரக்டர்கள் எப்போதும் தோளில் கறுப்பு சிவப்பு துண்டுடன் வரும் காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடியும்.
சீமான் ஒலிப்பது பாஜக குரலா?
இப்படி தான் சாதிய அடையாளத்தையும் அதன் பெருமையையும் அடித்து நொறுக்கிய இந்த நிகழ்வு ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவும் இயல்பாகவும் மாறியது. இதைத்தான் ‘பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாததாக’ கூறுகிறார் சீமான்.
இவரைப் போன்றுதான் திராவிட இயக்கங்கள் மீது வன்மத்தைக் கக்கும் சென்னை மாநகராட்சியின் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு சால்வை அணிவிக்க வந்ததை தடுத்து, “இது திராவிட இயக்கங்களின் கலாசாரம்… இது எதற்கு நமக்கு..? ” என வன்மத்தைக் கக்கினார்.
சுயமரியாதையும் சமத்துவமும் யாருக்கு கசப்பானதோ அவர்கள் குரலையே சீமானும் எதிரொலிக்கலாமா..?