Amazing Tamilnadu – Tamil News Updates

சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்… ரூ.30 லட்சம் வரை கடனுதவி!

மிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் (Loan schemes Under Tamil Nadu Minorities Economic Development Corporation – TAMCO) செயல்படுத்தப்படுகிறது.

கடன் திட்டங்கள்

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

திட்டம் 2 ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000மும், திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகப்பட்ச கடனாக ரூ.10,00,000 வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும், நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.

ரூ.30,00,000 வரை கல்விக் கடனுதவி

மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்தக பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சென்னை மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இணைப்பு சான்றிதழ்கள் என்னென்ன?

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version