சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ( Central Board of Secondary Education – CBSE) 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 ல் தொடங்கி மார்ச் 13 ஆம் தேதி வரையிலும், அதேபோன்று 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 ல் தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று முடிந்தது.
மொத்த தேர்ச்சி விகிதம் 87.98%
இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதும் மொத்த தேர்ச்சி விகிதம் 87.98% ஆக பதிவாகியுள்ளது. இது, கடந்த ஆண்டை விட அதிகம். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாகவே இருந்தது.
மாணவிகளே அதிக தேர்ச்சி
அதேபோல், இந்த ஆண்டு 91.52% மாணவிகளும், 85.12% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 16,000 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு
மண்டல வாரியான தேர்ச்சியில் 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்தையும், 98.47 சதவீதத்துடன் தமிழ்நாடு (சென்னை மண்டலம்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
திருவனந்தபுரம் மண்டலம்: 99.91%
விஜயவாடா 99.04%
சென்னை 98.47%
பெங்களூரு – 96.95%
மேற்கு டெல்லி – 95.64%
கிழக்கு டெல்லி – 94.51%
சண்டிகர் – 91.06%
பஞ்ச்குலா – 90.26%
புனே – 89.78%
அஜ்மீர் – 89.53%
10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவு
இதனிடையே சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்களில் 93.60% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 0.48% அதிகம். தேர்வு எழுதிய 22,38,827 மாணவர்களில் 20,95,467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோன்று 10-ம் வகுப்பு தேர்விலும் மண்டல அளவில் திருவனந்தபுரம் மண்டலமே 99.75 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. 99.60% தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் 2 ஆவது இடமும், 99.30% தேர்ச்சியுடன் தமிழ்நாடு (சென்னை மண்டலம்) 3 ஆவது இடமும் பெற்றுள்ளது