இந்த உலகில் எல்லோருமே, அவரவர்கள் அளவில் ஏதாவது ஒரு இலக்கு நோக்கியோ அல்லது இலட்சியத்தை நோக்கியோ இயங்கிக்கொண்டும் ஓடிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். அதில் வெற்றி கிடைத்தால் அது தனிப்பட்ட முறையில் அவர்களுக்கான அங்கீகாரமாகவோ அல்லது முன்னேற்றமாகவோ அமையும். ஆனால் வெகு சிலரே, மற்றவர்களும் அதுபோன்ற வெற்றிகளை அடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருபவர்களாக இருப்பார்கள். அப்படியான ஒரு வெற்றியாளர்தான் இஸ்ரோ விஞ்ஞானி பழனிவேல் வீரமுத்துவேல்!
நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் 1’, ‘சந்திரயான் 2’ மற்றும் ‘சந்திரயான் 3’ என 3 விண்கலங்களை இஸ்ரோ ஏவியதும், இதன் பின்னணியில் பல தமிழக விஞ்ஞானிகள் இருந்ததும் ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். அதே சமயம் இவர்களில் பலர் அரசுப் பள்ளிகளில் பயின்ற சாதனையாளர்கள்.
அந்த வகையில் அவர்களைப் பாராட்டும் விதமாகவும், தற்போது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் அரசு பள்ளியில் பயின்று இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு, கடந்த அக்டோபர் மாதம் “ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்” என்ற தலைப்பில் பாராட்டு விழா நடத்தியது. இதில் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், எம்.சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், டாக்டர் எம்.வனிதா, டாக்டர் நிகார் ஷாஜி, டாக்டர் பழனிவேல் வீரமுத்து ஆகிய 9 பேரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
நல்லதை விதைக்கும் வீரமுத்துவேல்
மேலும் அந்த 9 விஞ்ஞானிகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 7.5% ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்வி உதவித்தொகைப் பெற்று இளநிலை பொறியியல் படிப்பினை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பினை தொடரும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகளின் பெயரில் அமைக்கப்படும் உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் அவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விஞ்ஞானி வீரமுத்துவேல் தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.25 லட்சம் தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்கு பிரித்து வழங்கியுள்ளார். அதாவது விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு என அந்த பணம் 25 லட்சத்தையும் பிரித்து கொடுத்துள்ளார்.
வருங்காலத்தில் மேலும் பல வீரமுத்துவேல்களை உருவாக்கவும், அரசுப் பள்ளியில் படித்து முன்னேறிய ஒருவர், தான் பெற்றதை மீண்டும் இந்த சமூகத்துக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தை உருவாக்குவதற்குமான விதையாகவே உள்ளது வீரமுத்துவேலின் இந்த செயல். இதுதான் அதன் உண்மையான மற்றும் அழகான அம்சம்.
வெற்றிக்கான புதிய வரையறை
மேற்கூறிய கல்வி நிறுவனங்கள், அரசுப் பள்ளியில் படித்து அரசின் 7.5% ஒதுக்கீட்டின் கீழ் தங்களிடம் சேரும் மாணவர்களுக்கு உதவ இந்த நிதியைப் பயன்படுத்தும். இதன் மூலம், உயர்கல்வியைத் தொடர நிதி ஒரு தடையாக உள்ள மாணவர்களுக்கு, அவர்களின் எதிர்கால வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்படும். மேலும் இந்தச் செயல், அடுத்தடுத்த தலைமுறையினரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், அது ஒட்டுமொத்த சமூகத்திற்கே நன்மை பயப்பதாக மாறும்.
அதுமட்டுமல்லாது, ‘ஒருவரின் ‘வெற்றி’யை அவரது சாதனையை வைத்து மட்டும் மதிப்பிடாமல், அது மற்றவர்களும் அதேபோன்ற வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதை வைத்து மதிப்பிட வேண்டும்’ என வெற்றிக்கான வரையறையையும் மாற்றி எழுத வைத்துள்ளது விஞ்ஞானி வீரமுத்துவேலின் வெற்றி!