Amazing Tamilnadu – Tamil News Updates

தாராள தேர்தல் நன்கொடை: கனவுகளை விற்று கோடிகளை அள்ளிய ‘லாட்டரி கிங்’… யார் இந்த சாண்டியாகோ மார்ட்டின்?

ரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில், லாட்டரி மன்னன் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், ரூ.1,368 கோடி வழங்கி முதலிடத்தில் இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுவதோடு, யார் இந்த மார்ட்டின் என்ற கேள்வியையும் கிளப்பி விட்டுள்ளது.

யார் இந்த மார்ட்டின்?

சாண்டியாகோ மார்ட்டின் கதை, அரசியல் ஊழல்களுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். தற்போது மியான்மர் அழைக்கப்படும் பர்மாவில் ஒரு காலத்தில் வேலை தேடிச் சென்று செட்டிலான தமிழர்கள், பின்னர் அங்கிருந்து தாயகம் திரும்பி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குடியேறினர். அப்படி பர்மாவில் தொழிலாளியாக வேலை பார்த்த மார்ட்டின் குடும்பமும், கோவையில் குடியேறினர். அப்போது மார்ட்டினுக்கு வயது 13. அப்போதே பிசினஸ் மைண்டுடன் தேநீர் கடையில் லாட்டரி சீட்டுகளை விற்கும் தொழிலைத் தொடங்கினார்.

மிகச் சிறிய அளவில் ஆரம்பித்த அவரது அந்த தொழில், மெல்ல மெல்ல வளர்ந்த நிலையில், ‘மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை கோவையில் தொடங்கினார். 1980 களின் இறுதியில் தொடங்கிய அந்த நிறுவனம், 260-க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள், 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என ஒரு பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தது.

கிடுகிடு வளர்ச்சி… விரிந்த சாம்ராஜ்ஜியம்

தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமல்லாமல், ‘மார்ட்டின் கர்நாடகா’ என்ற நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநிலத்திலும், ‘மார்ட்டின் சிக்கிம் லாட்டரி’ நிறுவனத்தின் மூலம் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மாட்டின். இது தவிர மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிராவிலும் லாட்டரி விற்பனையில் இவரது நிறுவனமே முன்னணியில் இருக்கிறது. லாட்டரி வியாபாரத்தில் இத்தகைய கிடுகிடு வளர்ச்சியை எட்டியதால்,
‘லாட்டரி கிங்’ என்ற பெயருடன் வலம் வரத் தொடங்கினார்.

1990-களில் இவரது நிறுவனத்தின் இரு நம்பர் லாட்டரி, கோயம்புத்தூரில் கொடி கட்டிப் பறந்தது. லாட்டரி மோகம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்த நிலையில் தான், 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, அவசரச் சட்டத்தின் மூலம் லாட்டரியைத் தடைசெய்தது. ஆனாலும், மற்ற மாநிலங்களில் அவரது தொழில் பாதிப்பில்லாமல் தொடரத்தான் செய்தது.

அரசியல் தொடர்பு

அதே சமயம், அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அவர் தனது தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். லாட்டரிகள் மூலம் சாதாரண மக்களுக்கு கனவுகளையும் அதிர்ஷ்டங்களையும் விற்றுக்கொண்டே, பல இந்திய அரசியல் புள்ளிகளையும் வளைத்து, அவர்கள் மத்தியிலும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.

அதே சமயம், அதனால் சர்ச்சைகளும் வெடிக்காமல் இல்லை. கேரளாவில், கடந்த 2007 – 2008 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான ‘தேசாபிமானி’க்கு மார்ட்டின் 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்த விவகாரம், அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, அந்தப் பணத்தை கட்சி திருப்பி அளித்ததோடு, ‘தேசாபிமானி’ பத்திரிகையின் பொது மேலாளர் ஜெயரஞ்சன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

‘கனவுகளையும் அதிர்ஷடத்தையும் விற்பவர்’

சில ஆண்டுகளுக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான கே.எஸ். அச்சுதானந்தன், 2015 ல் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மார்ட்டினின் லாட்டரி வணிகத்தை நல்லவிதமாகவே குறிப்பிட்டார். லாட்டரிகளை ஏழைகளின் உயிர்நாடியாகவும், நம்பிக்கை கீற்றாகவுமே தான் பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

“அவர்களுக்கு (பொதுமக்கள்), இது ஒரு பாதிப்பில்லாத கனவு,” என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். கேரளாவின் லாட்டரி சீட்டு வருமானம் 2011ல் ரூ.557 கோடியாக இருந்த இலையில் 2015 ஆம் ஆண்டு ரூ.5,696 கோடியாக அதிகரித்து 2020 ஆம் ஆண்டில் ரூ.9,974 கோடியாக உயர்ந்துள்ளதைப் பார்க்கையில், அச்சுதானந்தன் ஏன் அவ்வாறு கூறியிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வழக்கு, சிறை

இப்படி தனது தொழில் சாம்ராஜ்ஜியம் மூலம், பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக மாறிய மார்ட்டின், ஒரு கட்டத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் பார்வையில் சிக்கினார். 2011 ஆம் ஆண்டு சிக்கிம் லாட்டரியை கேரளாவில் விற்கும்போது பல முறை கேடுகளை செய்து ஏராளமான கோடிகள் லாபம் பார்த்ததாக மார்ட்டின் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது சிபிஐ, 30 வழக்குகளைப் பதிவு செய்தது.

இத்தகைய சூழ்நிலையில்தான், 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நில அபகரிப்பு வழக்கில் மார்ட்டின் கைதுசெய்யப்பட்டார். அடுத்த 15 நாட்களில் அவர் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சுமார் 7 மாதங்கள் சிறையில் இருந்த மார்ட்டின், எல்லா வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.

இத்தகைய சூழ்நிலையில்தான், 2013 ஆம் ஆண்டில், கேரளாவில் சட்டவிரோத லாட்டரி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மார்ட்டின் வளாகத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தினர். தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு புகார்கள் தொடர்பாக, 2015 ஆம் ஆண்டில், வருமான வரித்துறையினர், மார்ட்டின் நிறுவன வளாகங்களில் சோதனை நடத்தினர்.

தேர்தல் நன்கொடையும் கிடப்பில் போடப்பட்ட வழக்குகளும்

அதன் பின்னர், 2018 ஆம் ஆண்டில், சட்டவிரோத லாட்டரி நடவடிக்கைகள் மற்றும் கூறப்படும் நிதிக் குற்றங்கள் தொடர்பான விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, பல மாநிலங்களில் உள்ள மார்ட்டினின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. மார்ட்டின் மீதான கடைசி தாக்குதலில் ஒன்றாக, மே 2023 ஆம் ஆண்டில், சிக்கிம் அரசாங்கத்திற்கு ரூ. 900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ரூ.457 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இத்தகைய சூழ்நிலையில் தான், 1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை மார்ட்டின் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருப்பது அனைவரின் புருவங்களை யும் உயர்த்தியுள்ளது.

அதே சமயம், அவரது நன்கொடை எந்த கட்சிக்கு அதிகம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்தால், அவர் மீதான வழக்குகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிடும்.

Exit mobile version