பரபரப்பான சென்னை தொடங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்படும் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்த வர்த்தகங்கள் மூலம் , தமிழ்நாடு நீண்ட காலமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாற்றும் முக்கியமான மாநிலமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சமீபத்திய சாதனையாக சரக்கு கையாளுகை துறையில் முத்திரை பதித்து இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழகம்.
உற்பத்தி பொருட்கள் மற்றும் தயாரிப்பு பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இருப்பு, நிர்வகிப்புக்காக கொண்டு சென்று, அதனை இறுதி நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பது வரையிலான பணிகளுக்கு தங்கு தடையற்ற போக்குவரத்து மிக முக்கியமானது.
அந்த வகையில் தமிழக அரசு சென்னை, கோவை, திருப்பூர், கரூர் போன்ற தொழில்துறை மையங்களிலிருந்து மாநிலத்தின்/இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் விரைவாக செல்லும் வகையில், மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளை கிராமப்புற பகுதிகளுடன் இணைத்து துரிதமான, திறமையான போக்குவரத்திற்கு வழி வகுத்துள்ளது. இதுபோன்ற தடையற்ற போக்குவரத்து வசதிதான் திருப்பூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆனாலும் சரி அல்லது சென்னையில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்களானாலும் சரி, அதன் உற்பத்தியை அதிகரிக்க வைத்து, தமிழ்நாட்டின் வணிகங்களுக்கு போட்டித்தன்மையை அளிக்கிறது.
ஒன்றிணைக்கும் போக்குவரத்து வசதி
சாலை போக்குவரத்து மட்டுமல்லாது ரயில், விமானம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றைத் தடையின்றி ஒன்றிணைக்கும் திறனையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து திருப்பூர் அல்லது கோவைக்கோ அல்லது அந்த இடங்களிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு எந்த ஒரு சரக்கு கன்டெய்னரையும் எளிதாக கொண்டு செல்ல முடியும். அந்த அளவுக்கு அனைத்து மார்க்கத்திலும் மாநிலத்தின் போக்குவரத்து வசதி ஒன்றோடொன்று இணைந்திருக்கிறது. இதனால் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான நேரமும் செலவும் மிச்சமாகிறது என்பதால் தான், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை எளிதில் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
மேலும், சேமிப்புக் கிடங்குகளை நவீனமயமாக்குவது முதல் துறைமுகங்களை புதுப்பித்தல் மற்றும் அதிநவீன மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களை (MMLPs – Multi-modal logistics parks) உருவாக்குவது வரை, தமிழ்நாடு தொடர்ந்து தளவாட உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இந்த MMLP-க்கள், ஒரே இடத்தில் லாஜிஸ்டிக்ஸ் மையங்களாக செயல்பட்டு, சேமிப்புக் கிடங்கு, மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மற்றும் தடையற்ற சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை வழங்குகின்றன.
சரக்கு கையாளுகை குறியீட்டில் சாதனை
இதுபோன்ற காரணங்களால் தான், ‘லாஜிஸ்டிக்ஸ்’ எனப்படும் சரக்கு கையாளுகை குறியீட்டில், இந்திய அளவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘சாதனையாளர்’ மாநிலமாகத் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது தமிழகம். இந்த குறியீடு, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தேவையான, போக்குவரத்து சேவைகளின் செயல்திறனை குறிக்கும். இந்த குறியீட்டின் கீழ், மாநிலங்கள், ‘சாதனையாளர்கள்’, ‘ஆர்வர்மிக்கவர்கள்’ மற்றும் ‘வளர்பவர்கள்’ என வரிசைப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, சண்டிகர், அஸ்ஸாம், தெலுங்கானா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், முன்னேறுபவர்களாக இடம்பெற்று உள்ளன.கோவா, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வளர்பவர்களாக இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், 2023 ஆம் ஆண்டில் சரக்கு கையாளுகை துறையில் மாநில அரசு செலுத்திய அதீத கவனம், புதிய சரக்கு கையாளுகை கொள்கை அறிவிப்பு, இந்தத் துறைக்கு ‘முன்னுரிமைத் தொழில்’ அந்தஸ்தை வழங்குதல் மற்றும் தொழிற்துறை பகுதிகளை மாநிலத்தின் கடைகோடிக்கும் இணைக்கும் வசதி போன்றவை தான் மாநிலத்துக்கு இந்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது.