“சந்திராயன் வெற்றி … அந்த விதை பெரியார் போட்டது!”

ரு பக்கம் திராவிட கருத்தியலுக்கும் தந்தை பெரியாருக்கும் எதிராக சில தமிழ்த் தேசிய அமைப்புகளும் வலதுசாரி இயக்கங்களும் கச்சைக் கட்டிக்கொண்டு மல்லுகட்டுகின்றன. இன்னொரு பக்கம் பெரியார் மறைந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், அவரின் சமூக நீதி, சமத்துவ சமுதாய சிந்தனைகளும், பேசிச் சென்ற கருத்துகளும் தமிழ்ச் சமூகத்தையும் தமிழ்நாட்டையும் தாண்டி இன்று இந்தியாவெங்கும் பரவி வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு எழுதிய கடிதத்தில், “பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழி நடத்தட்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது ஒருபுறமிருக்க எளிமையான குடும்பத்தில் பிறந்து, முட்டி மோதி வாழ்க்கையில் உயரம் தொட்டவர்கள், உயர் படிப்பில் சாதித்தவர்கள், தொழில்கள், பிசினஸில் வெற்றி பெற்றவர்கள் எனப் பலரும் தங்களது வெற்றியின் பின்னால் பெரியாரும் முக்கிய காரணமாக இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

அப்படிதான் கடந்த மாதம், தமிழகத்தில் மிகப்பெரிய சைவ ஹோட்டல்களில் ஒன்றான அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் கே.டி.சீனிவாச ராஜா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வெஜ் ஹோட்டல்கள் பிராமணர்கள் வசமே இருந்த நிலையில், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பண்ணலாம் என்று மாற்றிக்காட்டியவர் தந்தை பெரியார்தான்” எனக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.

‘பெரியார் விதைத்த விதை’

இந்த நிலையில்தான், “ ‘சந்திரயான் 1 திட்டம் உருவாகக் காரணமாக அமைந்ததும் பெரியாரின் வார்த்தைகள்தான் காரணம்” என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘பெரியாரும் அறிவியலும்’ என்ற தலைப்பில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் தோன்றும் அண்ணா மற்றும் பெரியார் படத்தைச் சுட்டிக்காட்டி, “என்னுடைய பெயர் வருவதற்கு காரணம் இவர்” என்று அண்ணாவையும், “எனக்கு அந்த பெயரை எனது அப்பா வைப்பதற்கு காரணம் அவர்” என்று பெரியாரையும் சுட்டிக்காட்டி, அவர்கள் இருவரால்தான் நான் இங்கே இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் எனப் பேசுகிறார். அந்த வீடியோ க்ளிப்பிங்தான் செம வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் “யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்கமாத்தைவிட உன் அறிவு பெரியது. அதை சிந்தி என பெரியார் சொல்லியிருக்கிறார். பெரியாரின் கருத்துக்கள் அறிவியலோடு ஒத்து போகின்றன. குறிப்பாக இந்த வார்த்தை நிலவு பயணத்திற்கு ஒன்றி போகிறது. கல்லூரியில் நீங்கள் படிக்கும் பாட புத்தகங்கள், ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை கூட அப்படியே நம்பிவிட வேண்டிய அவசியமில்லை என்று பெரியார் சொல்லியிருக்கிறார்.

நான் இதற்கு முன்னர் பல செயற்கைக்கொள்களை செய்திருந்தாலும், சந்திரயான் எனும் செயற்கைக்கோள்தான் எனக்கு ஒரு முகவரியை கொடுத்தது. அடையாளத்தை கொடுத்தது. இதற்கு பின்புலத்தில் பெரியாரின் இந்த வார்த்தைகள்தான் இருக்கின்றன. இதுதான் என்னுள் விதையை விதைத்தது.

இதுதான் நான் விஞ்ஞானியாக பரிணமித்தபோது நிலவில் நீரை கண்டுபிடிக்க உதவியது. அதாவது ரஷ்யாவும், அமெரிக்காவும் சென்ற பாதையில் செல்லாமல், வேறுபாதையில் நாங்கள் சந்திரயான்-1 செயற்கைக்கோளை இயக்கினோம். அவர்கள் பின்பற்றியது ‘நிலவில் இறங்கு நீரை தேடு’ எனும் திட்டம். ஆனால் நாம் பின்பற்றியது ‘நீரை தேடு, பின்னர் நிலவில் இறங்கு’ எனும் திட்டம். எனவேதான் ரோவைரை அனுப்பாமல் வெறும் செயற்கைக்கோளை மட்டும் அனுப்பினோம். இது நிலவை மேலிருந்து கீழாக சுற்றி வந்தது. மற்ற நாடுகள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் நிலவை இடமிருந்து வலமாக சுற்றி வந்தது. மற்றவர்களை விட வித்தியாசமாக யோசித்ததால்தான் நம்மால் நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது” என்று மயில்சாமி அண்ணாதுரை மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

hest blå tunge. Thank you for choosing to stay connected with talkitup news chat. Simay m trawler : 5 cabins private yacht charter fethiye gocek.