இன்று உலக தொலைக்காட்சி தினம்…
நிமிடத்துக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ், காலை தொடங்கி இரவு வரை விடாமல் குடும்ப சண்டைகளைக் காட்டிக் கொண்டிருக்கும் சீரியல்கள், போட்ட படங்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பும் மூவி சேனல்கள், அறையில் ஆளே இல்லாவிட்டாலும் பாடிக்கொண்டிருக்கிற மியூசிக் சேனல்கள், ஸ்போர்ட்ஸ் சேனல்கள், கல்வி சேனல்கள்… என எதை பார்ப்பது எதை விடுவது என்ற கதையாக திகட்டத் திகட்ட நிகழ்ச்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன இன்றைய தொலைக்காட்சி சேனல்கள். போதாதற்கு ஓடிடி தளங்கள் வேறு…
இவையெல்லாவற்றையும் விட, மேற்கூறிய அத்தனை நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி முன்னர் அமர்ந்துதான் பார்க்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. ஒவ்வொருவரின் கையிலிருக்கும் மொபைல் போன்களே தொலைக்காட்சிகளாக உருவெடுத்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இதனாலேயே தொலைக்காட்சி அதன் ஈர்ப்பையும் சுவாரஸ்யத்தையும் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறது.
பரவச ‘ரூபாவாஹினி’… ஸ்ட்ரிக்ட் ஹெட்மாஸ்டர் ‘தூர்தர்ஷன்‘
ஆனால், இந்திய அளவில் மட்டுமல்ல… தமிழக அளவிலும் தொலைக்காட்சியின் பொற்காலம் என்றால் அது 80களும் 90களும் தான். இன்னும் சரியாக சொல்வதானால் 1985-லிருந்து தான் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மூலமாக தொலைக்காட்சி அதன் வசீகரத்தைப் பெறத் தொடங்கியது. கூடவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டுமே தெரிந்த இலங்கையின் ரூபாவாஹினி தொலைக்காட்சிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ரூபாவாஹினியின் தமிழ் நிகழ்ச்சிகளில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பப்படும் தமிழ் சினிமாவை பார்க்க பரவசத்துடன் காத்திருப்பார்கள் அப்போதைய நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத்துக்காரர்கள்.
அப்போதெல்லாம் சென்னை, கோவை போன்ற சில நகரங்களைத் தவிர்த்து ஒரு தெருவில் நான்கைந்து வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி இருந்தாலே பெரிய விஷயம். அதுவும் கறுப்பு வெள்ளை டிவி-கள் தான் பெரும்பாலான வீடுகளில். கலர் டிவி-யெல்லாம் பெரும் பணக்காரர்களது வீடுகளில்தான். இன்று தொலைக்காட்சிகளில் சலிக்க சலிக்க சினிமாவும் சீரியல்களும் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் அன்று ஒரே சாய்ஸ் தூர்தர்ஷன் மட்டுமே. அதுவும் காலையில் பெரும்பாலும் செய்தி, மாலை 4 அல்லது 5 மணிக்கு சிறுவர்களுக்கான ‘கண்மணி பூங்கா’ நிகழ்ச்சியுடன் தொடங்கி, இசை அல்லது நாட்டிய நிகழ்ச்சிகள், ஆன்மிகம், வேளாண்மை நிகழ்ச்சிகள், செய்திகள்… என ஒரு ஸ்ட்ரிக்டான ஹெட்மாஸ்டருக்கான இயல்புடன்தான் மாநில நிகழ்ச்சிகள் இருக்கும். இரவு 8.30 உடன் தமிழ் செய்திகள் முடிவடைந்துவிட்டால் தேசிய ஒளிபரப்புக்கு மாறிவிடும்.
சென்னை போன்ற நகரங்களில் அல்லது நடுத்தர வர்க்கத்தினர் வீடுகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆங்கில செய்தியை பார்ப்பார்கள். இது தவிர சனிக்கிழமை இரவில் என்டிடிவி புகழ் பிரணா ராய் அந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் ‘வேர்ல்டு திஸ் வீக்’ ( World This Week ) நிகழ்ச்சியும், சித்தார்த்த பாசு தொகுத்து வழங்கிய Quiz Time நிகழ்ச்சியும் பிரபலம். இந்த இரண்டையும் இந்த பிரிவு மக்கள் பார்ப்பார்கள்.
ஏங்க வைத்த பிராந்திய மொழிப்பட வரிசை…
‘அப்ப சினிமாவும், பாட்டும், சீரியலும் கிடையாதா… அத எப்பதான் போடுவாங்க..?’ என்றுதானே கேட்கிறீர்கள். போட்டார்கள்… ஆனால் அது வாரம் ஒரு முறைதான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலையில் ஒரு படம் ஒளிபரப்புவார்கள். அது பெரும்பாலும் கறுப்பு வெள்ளை படமாகத்தான் இருக்கும். எப்போதாவது எம்ஜிஆர், சிவாஜி கால வண்ணப் படங்களும் இருக்கும். புதிய படங்கள் என்றால் வெகு அரிதாக ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘எங்கேயோ கேட்டகுரல்’, ‘சலங்கை ஒலி’ போன்ற ரஜினி-கமல் படங்கள், ’16 வயதினிலே’, ‘நிழல்கள்’ , ‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற பாரதிராஜா, பாலச்சந்தர் படங்களும் இருக்கும். இது தவிர தேசிய ஒளிபரப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும் ஒவ்வொரு பிராந்திய மொழிகளில் அவார்டு வாங்கிய படமும், ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமாரான பிராந்திய மொழிப் படம் ஒன்றும் ஒளிபரப்பப்படும்.
இந்த படங்களை அகர வரிசைப்படி ( Alphabetical order) அசாம் மொழியில் ( A) ஆரம்பித்து ஒவ்வொரு மொழிப்படமாக ஒளிபரப்புவார்கள். தமிழ் மொழிக்கு T வரிசை வரும் வரை காத்திருக்க வேண்டும். இப்படி ஒரு சுற்றுப்போய் அடுத்த சுற்று தமிழ் படத்தைப் பார்க்க மாத கணக்கில் காத்திருக்க வேண்டும். 80s ‘கிட்ஸ்’களிடம் கேட்டால் இது குறித்து சொல்ல அவர்களிடம் ஏராளமான கதைகள் இருக்கும்.
அடுத்ததாக பாடல்கள். இதில் சென்னை தூர்தர்ஷன் கொஞ்சம் கருணை காட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் ‘ஒலியும் ஒளியும்’ என்ற பெயரில் புதிய ரிலீஸ் படங்களின் பாடல்களை ஒளிபரப்புவார்கள். அதுவும் தூர்தர்ஷனுக்கான வருமானமாகத்தான் இருக்கும். படத் தயாரிப்பாளர்கள், தங்களது புதிய படத்தின் விளம்பர உத்தியாக, தங்களது படத்தின் பாடல்களை கட்டணம் செலுத்தி ஒளிபரப்ப வைப்பார்கள். இதை பார்க்கத்தான் தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் பெரும் கூட்டம் கூடிவிடும். வீட்டின் உள்ளே இடமில்லாமல் ஜன்னல்களிலும் கதவுகளின் இடுக்குகள் வழியாகவும் கண்டு ரசிப்பார்கள். தெருவே வெறிச்சோடி கிடக்கும் என்பதால், திருடர்கள் ‘ஒலியும் ஒளியும்’ நேரத்தில் திருட வருவதாகவும் அப்போது பேச்சுகள் உண்டு.
பிள்ளையார் சுழி போட்ட சீரியல்கள்
அதேபோன்று தேசிய ஒளிபரப்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் ஒளிபரப்பான மகாபாரதம், ராமாயணம் சீரியல்களை மொழி கடந்தும் தமிழக மக்கள் ரசித்தார்கள். அந்த சமயங்களில் ஊரே வெறிச்சோடி காணப்படுவதை வைத்து அப்போதைய பத்திரிகைகளில் ஏராளமான ஜோக்குகள் வெளியானது உண்டு. சீரியல்கள் விஷயத்தில் 80-களின் இறுதிகள்தான் தேசிய ஒளிபரப்பிலும், பிராந்திய ஒளிபரப்பிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. தேசிய ஒளிபரப்பில் “மால்குடி டேஸ்’, ‘லைஃப் லைன்’, ஷாரூக் கான் முதலில் அறிமுகமான ‘ஃபௌஜி’ போன்ற சீரியல்கள் ஹிட்டடித்தன என்றால், தமிழில் ஞாயிற்றுக்கிழமைகளின் காலையில் ஒளிபரப்பான மறைந்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ-வின் ‘ஜனதா நகர் காலனி’ போன்ற சீரியல்கள் தமிழ் சீரியல்களுக்கான தொடக்கமாக அமைந்தன.
இளையராஜா இசையமைத்த சீரியல்
அதன் பின்னர் நடிகை சுகாசினி இயக்கத்தில் வந்த ‘பெண்’, பாலச்சந்தரின் மின் பிம்பங்கள் நிறுவனத்தின் ‘ரயில் சிநேகம்’ போன்ற சீரியல்கள் எல்லாம் சினிமா போன்றே எடுக்கப்பட்டதால், அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இங்கே இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். சுகாசினியின் ‘பெண்’ சீரியலுக்கு இசையமைத்தவர் அப்போது திரையிசையில் உச்சத்தில் இருந்த இளையராஜா. “இளையராஜா எப்படி சீரியலுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார்..?” என அப்போது சுகாசினியிடம் கேட்கப்பட்டபோது, “ ராஜா சாரை பார்த்து ‘டிவி சீரியல் பண்ணப்போறேன்… நீங்கதான் மியூசிக் போடணும்’னு கேட்டேன்… ‘பண்ணிட்டா போச்சு’ன்னு அட்டகாசமா போட்டுத்தந்தாரு” ன்னு அவர் சொல்லி இருந்தார். இந்த சீரியல்கள் தான் ‘சன்’ போன்ற தனியார் தொலைக்காட்சிகளின் வருகைக்கு பின்னர் சீரியல்கள் அத்தியாயத்துக்கு பிள்ளையார் சுழி போட்டன எனலாம்.
பொற்கால நினைவுகள்…
அதேபோன்றே விளம்பரங்கள்… “ஐ லவ் யூ ரஸ்னா” தொடங்கி “வாஷிங் பவுடர் நிர்மா ”,“அரிய சுவை உதயம்… சன்ரைஸ் ”, Nerolac பெயின்ட் நிறுவனத்தின் “நேரோலெக் … நேரோலெக்…”, ஓனிடா டிவி-யின் “Owners pride Neighbour’s envy…” போன்ற விளம்பரங்களெல்லாம் தூர்தர்ஷனின் பொற்கால நினைவுகள்…
‘அழகன்’ படத்தில் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா… இன்னும் இருக்கா …’ என்ற பாடலில் மம்முட்டியும் பானுப்பிரியாவும் தொலைபேசியில் பேசியபடியே ஒரு முழு இரவையும் கடத்துவார்கள். தூர்தர்ஷன் ஒளிபரப்பு இரவில் முடிவடைந்து, காலையில் ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன்னரான மியூசிக்குடன் கூடிய அந்த காட்சியை சிம்பாலிக்காக காட்டி இருப்பார் இயக்குநர் பாலச்சந்தர். அப்போது அது வெகுவாகவே ரசிக்கப்பட்டது.
இத்தகைய விளம்பரங்களும் பாடல்களும் ஒலிக்கும் வரை தூர்தர்ஷன் நினைவுகளுக்கு தூக்கமே இல்லை..!