கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், கொரோனா வைரஸ் தாக்குதலினால் உலகம் முழுவதும் சுமார் 68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தடுப்பூசி மட்டுமே மக்களை இதிலிருந்து காப்பாற்றும் என்ற நிலையில், கொரோனா வராமல் தடுப்பதற்கும், கொரோனா வந்தவர்களுக்கு மேலும் தாக்காமல் இருக்கவும் பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசி தயாரிப்புகளில் ஈடுபட்டன.
அவற்றில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி நல்ல பலன் தந்தது. அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி, உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும், ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் இந்த தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டது.
அந்த வகையில், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு உதவியது. இதில் ‘கோவாக்சின்’,
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாகும்.
பக்கவிளைவு சர்ச்சை
இதில் ‘கோவிஷீல்டு’ குறித்து, அப்போதே சர்ச்சைகள் எழுந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ‘கோவிஷீல்டு’ குறித்த புதிய சர்ச்சை எழுந்தது. அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி உயிரிழப்பு மற்றும் பலருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்காக அந்நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனகா
வழக்கு விசாரணையின்போது, கோவிட் தடுப்பூசியால் மூளையில் ரத்தம் உறைதல், ரத்தத் தட்டணுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதே சமயம், இவை எப்படி ஏற்படுகின்றன என்பது பற்றி தெரியவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியது.
இது ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது
திரும்பப் பெறப்படும் ‘கோவிஷீல்டு’
கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதாலும், சந்தையில் தேவைக்கு அதிகமாகவே பல்வேறு கொரோனா தடுப்பூசி உள்ளதாலும் தங்கள் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.
இருப்பினும், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டவர்களிடையே பக்க விளைவுகள் குறித்த அச்சம் நீங்கியபாடில்லை.