தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல முறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டும், ‘வரலாறு காணாத மழை’ என்ற போதிலும் அவ்வாறு அறிவிக்க இயலாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒரே மாதத்தில் 2 பேரிடர்
டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடித்துவிட்டு தலைநிமிருவதற்குள், அடுத்த ஒரு வாரத்திலேயே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தினங்களில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் ஒரே ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இப்படி, அடுத்தடுத்த இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்ததைக் கருத்தில் கொண்டு, தமிழக வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். மேலும் பிரதமர் மோடியையும் இந்த வாரம் டெல்லிக்குச் சென்று நேரில் சந்தித்து, “நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுதான் 1500 கோடி ரூபாய்க்குக் கூடுதலாக செலவிட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசு வழங்கிய ரூ.450 கோடி நிதி SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. எனவே இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்”என வலியுறுத்தி இருந்தார்.
கைவிரித்த ஒன்றிய நிதி அமைச்சர்
இதனால், ஒன்றிய அரசிடமிருந்து நல்ல அறிவிப்பு வரும் என தமிழக அரசும் தமிழக மக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழகத்துக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில், தமிழக வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என கைவிரித்துள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகையாக தமிழக அரசு வழங்கும் ரூ. 6,000 மாநில அரசின் நிதியிலிருந்தே கொடுக்கப்படுவதையும், தமிழகத்தில் பெய்த மழை வரலாறு காணாத மழைதான் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதே சமயம், அந்த 6,000 தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கு மூலம் ஏன் செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த வெள்ள நிவாரண தொகையை வாங்குபவர்களில் பெரும்பாலானோர் ஏழை எளிய மக்கள். அவர்களில் பலருக்கு வங்கி கணக்கு கிடையாது. அப்படியே வங்கி கணக்கு வைத்திருந்தாலும் அதில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம் என வங்கி கணிசமான தொகையை பிடித்தம் செய்துவிடும். ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு முதல் மாதம் பணம் செலுத்தியபோது, வங்கிகள் அதில் மினிமம் பேலன்ஸ் அபராத தொகையைப் பிடித்தம் செய்துகொண்டன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே வெள்ள நிவாரண தொகை நேரடியாக ரேசன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் எதிர்ப்பு
இது குறித்து தெரிந்தே நிர்மலா சீதாராமன், மேற்கூறிய கேள்வியை எழுப்பியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், தமிழகம் கேட்ட உரிய நிதி உதவியை அளிக்காததைக் கண்டித்தும், தேசியப் பேரிடராக அறிவிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசுக்கு எதிராக X சமூக வலைதளத்தில் #OurTax_OurRights என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழக மக்கள் தரப்பில் ஏராளமானோர் தங்களது எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இதுபோன்ற பேரிடரின்போது பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அள்ளிக்கொடுப்பதும், தமிழகம் கேட்டால் கிள்ளி கொடுப்பதும் பல ஆண்டுகளாகவே தொடர் கதையாகவே உள்ளதை கீழ்க்காணும் கடந்த கால பட்டியல்களில் உள்ள தகவல்கள் மூலமே தெரிந்துகொள்ளலாம்.
கடந்த காலத்தில் கேட்டதும் கிடைத்ததும்…
2015 சென்னை வெள்ளம், கஜா, தானே, வர்தா, ஓகி, நிவார் புயல்/வெள்ளம் போன்ற பேரிடரின்போது தமிழக அரசு கேட்ட தொகையும் ஒன்றிய அரசு வழங்கிய தொகையும் வருமாறு:
2015 வெள்ளம்: கேட்டது ரூ. 25,912 கோடி, கிடைத்தது ரூ. 1,738 கோடி
2016 – 17 வறட்சி: கேட்டது ரூ. 39,565 கோடி, கிடைத்தது ரூ. 1748 கோடி
வர்தா புயல்: கேட்டது ரூ. 22,573 கோடி, கிடைத்தது ரூ. 266 கோடி
2017 – 18 ஓகி புயல்: கேட்டது ரூ. 9,302 கோடி, கிடைத்தது ரூ. 133 கோடி
கஜா புயல்: கேட்டது ரூ. 17,899 கோடி, கிடைத்தது ரூ.1,146 கோடி
2020 நிவர் புயல்: கேட்டது ரூ. 3,758 கோடி, கிடைத்தது ரூ.63.18 கோடி
அதாவது மொத்த தேவையில் 4.2% தொகையை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும், தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு முதல்கட்டமாக ரூ. 2,000 கோடியும் கேட்டிருந்த நிலையில் தான், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறதோ என்று எண்ணதக்க அளவில் மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்!