கே. பாலச்சந்தரின் துணிச்சல் நாயகிகள்!
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று…
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல… இந்திய சினிமா அளவிலும் மிகவும் மதிக்கப்பட்ட, மதிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவர் தான் மறைந்த இயக்குநர் கே. பாலசந்தர். புதுமையான, வித்தியாசமான, சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை தனது படங்களில் படைத்து, தமிழ்த் திரையில் உலாவ விட்டவர். திரை அரங்கத்தைவிட்டு வெளியே வந்த பிறகும், அவர் படைத்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதித்திரையிலிருந்து அத்தனை சுலபத்தில் நீங்கி விடாது. அவரது கதாபாத்திரங்களில் ஏதாவது ஒரு அம்சம், அது வசனமாகவோ அல்லது செய்கையாகவோ வித்தியாசமாக வெளிப்பட்டிருக்கும். அது ரசிகர்களின் மனதில் நீண்ட நாள் அசைபோடத்தக்கதாகவே இருக்கும்.
தனது இயக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை பாலசந்தர் படைத்திருந்தாலும், அவரது படைப்புகளில் கதாநாயகிகளுக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. அவரின் படங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியவை. அதே சமயம் அவரது கதாநாயகிகள் தங்கள் கணவர்களுக்கு சமைத்து போட்டுவிட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனவர்கள் அல்ல. தங்களது தலையெழுத்தை தாங்களே தீர்மானித்தவர்கள். வாழ்வின் பிரச்னைகளையும் சவால்களையும் சுயமாக துணிச்சலுடன் எதிர்கொள்பவர்களாகவும், தனக்கு சரி என்று தோன்றுவதில் பிடிவாதமாக நிற்பவர்களாகவும் அவரது கதாநாயகிகள் தோன்றினர்.
இதில் சிக்கலான, சர்ச்சையான சில கதாபாத்திரங்களும் உண்டு. ஆனாலும் அனைத்து பாத்திரங்களுமே ஏதாவது ஒரு வகையில் ரசனைக்குரியதாக அமைந்து ரசிகனை கட்டிப்போட்டதாகவே இருந்தன.
அப்படி பாலச்சந்தர் படங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த 5 படங்களின் பெண் கதாபாத்திரங்கள் இங்கே…
1) அரங்கேற்றம் – லலிதா ( நடிகை பிரமிளா)
அந்த வீட்டில், பசியும் பட்டினியும் எப்போதும் நிரந்தரம். உணவு என்பது எப்போதாவதுதான்! படிக்கிற பையனுக்கு நோட்டுப்புத்தகங்கள் வாங்கக்கூட ’நோட்டு’ கிடையாது. வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக ‘லலிதா’ என்ற கதாபாத்திரத்தில் பிரமிளா நடித்திருந்தார். அப்பாவிடம் சண்டைபோட்டு சம்மதம் வாங்கி, வேலைக்குச் செல்கிறாள். வீட்டில் சந்தோஷம் கொஞ்சமாக எட்டிப்பார்க்கிறது. அடுத்து மூத்த தம்பியின் டாக்டர் படிப்பு. சிபாரிசுக்காக சென்னை செல்கிறாள். அங்கே, சின்னாபின்னமாக்கப்படுகிறாள். சகலத்தையும் முழுங்கிக்கொண்டு, ஊர் திரும்புகிறாள்.
அடுத்தடுத்த நிகழ்வுகளில், சமூகம் லலிதாவை எப்படிப் பார்க்கிறது. அந்தக் குடும்பத்துக்குத் தெரிந்ததும் லலிதாவை எப்படி அவர்கள் அணுகுகிறார்கள் என்பதையெல்லாம் காட்சிக்குக் காட்சி நம் சட்டையைப் பிடித்து உலுக்கியெடுத்துச் சொல்லியிருப்பதுதான் ‘அரங்கேற்றம்!’. 1973 ல் ரிலீசான இந்தப்படம் அப்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
2) அவள் ஒரு தொடர் கதை – கவிதா ( நடிகை சுஜாதா)
1974 ல் வந்த இந்த படத்தின் கதாநாயகியான கவிதாவின் தைரியமான மற்றும் அழகான கதாபாத்திரத்தை ஒரு போதும் மறக்க முடியாது. துணிச்சலான நடை, உமிழும் கண்கள், தேளாக கொட்டும் நாக்கு… என சுஜாதா நடித்த அந்த கதாபாத்திரம் உங்கள் மனதை விட்டு அத்தனை சுலபத்தில் அகன்று விடாது. ஒரு பெண் தனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவளிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும். ‘அன்பும் தியாகமும் உண்மையில் ஒரு பெரிய விஷயமல்ல, அது இந்த நீண்ட வாழ்வில் அற்பமான விஷயம்’ என்று கவிதா தனது சொந்த வாழ்க்கையின் ஊடாக நமக்குக் கற்பிப்பிதாகவே சொல்ல வேண்டும்.
ஓடிப்போன கணவனை நினைத்துக் கொண்டிருக்கிற அம்மா, அக்காவுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டு விதவையாக நிற்கும் தங்கை, இன்னொரு தங்கை, பொறுப்பில்லாத குடிகார அண்ணன் (ஜெய்கணேஷ்). அவனை நம்பி காலக்குப்பையைக் கொட்டிக்கொண்டிருக்கும் அண்ணி, அவர்களின் குழந்தைகள், பார்வையற்ற தம்பி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அவர்கள் மொத்த பேரையும் இழுத்துப் பிடித்து குடும்ப சக்கரத்தை ஓட்டிச் செல்லும் சாரதியாக வரும் கவிதா கதாபாத்திரத்தில் சுஜாதா நடிப்பில் பின்னியிருப்பார்.
இந்த கதாபாத்திரம் வாயிலாக ரசிகனுக்கு பாலச்சந்தர் சொன்ன விஷயம், குடும்ப பொறுப்பை ஆணால் மட்டுமல்ல பெண்ணாலும் சுமக்க முடியும். உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியமானது.
3) அபூர்வ ராகங்கள் – பைரவி ( நடிகை ஶ்ரீவித்யா)
வேதாளத்தை தன் முயற்சியில் சற்றும் தளராமல் மீண்டும் மீண்டும் தூக்கி தூக்கி செல்லும் விக்ரமாதித்தன் கடைசியில் வேதாளம் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் முழிப்பான் – ஒரு அப்பாவும் பையனும் முறையே மகளையும் அம்மாவையும் கல்யாணம் செய்து கொண்டால் அவர்களின் உறவு முறை என்ன? இந்த கதையைத்தான் 1975 ல் வெளிவந்த இந்த படத்தில் பாலசந்தர் கையாண்டிருந்தார்.
ஆண் – பெண் இடையேயான வயது வித்தியாசம் எவ்வளவாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் காதல் வரலாம் என்று காட்டிய படம். திருமணமான பெண்ணுக்கும் புத்திசாலித்தனமான இளங்கலைஞருக்கும் ( கமல்) இடையே காதல் நிகழும் அத்தகைய துணிச்சலான முயற்சியை சித்தரிக்கும் திரைப்படங்களை அவருக்குப் பிறகு யாரும் சித்தரிக்கவில்லை. இப்படத்தில் பாலச்சந்தரின் ‘டச்’ முழு படத்திலும் நிரவி கிடக்கும் . பைரவி ( ஸ்ரீவித்யா) ஒரு முதிர்ந்த பெண்ணாக, தனது கடந்த கால வாழ்க்கைக்கும் தற்போதைய காதலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு, முடிவுகளை எடுப்பதை பார்க்கும்போது அது ரசனைக்குரியதாக இருக்கும். ஸ்ரீவித்யாவின் கணவராக இந்த படத்தில் தான் ரஜினி தமிழி திரையுலகில் அறிமுகமானார்.
4) மூன்று முடிச்சு – செல்வி ( ஶ்ரீதேவி)
அழகான திருப்பங்கள் கொண்ட இப்படம் 1976 ல் வெளியானது. நிச்சயமாக, இந்த படத்தில் ரஜினியை யாராலும் மறக்க முடியாது என்றாலும், கே.பி-யின் செல்வி (ஸ்ரீதேவி) கதாபாத்திரம் அத்தனை வலுவானதாக படைக்கப்பட்டிருக்கும் . மிகுந்த ஏழ்மை நிர்கதி நிலையில் இருக்கும் ஸ்ரீதேவி. தன்னை விட 30 வயது மூத்தவரான விஸ்வநாத்தை திருமணம் செய்து கொள்ளத் துணியும் இடங்கள் நம்பும் படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
தனது புத்திசாலித்தனத்தால் ரஜினியை அற்புதமாக டீல் செய்யும் அந்த கதாபாத்திரம் எப்போதும் நினைவில் இருக்கும். தன் காதலன் தன் கண் முன்னே கொலை செய்யப்பட்டாலும், அவள் பாறை போல நின்று, இறுதியில் “வில்லனுக்கு” பாடம் கற்பிக்கும் பாத்திரத்தில் மிளிர்வார் ஸ்ரீதேவி.
5) சிந்து பைரவி – சிந்து ( சுகாசினி)
பாலச்சந்தரின் ஒவ்வொரு பட கதாநாயகிகளின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகனை கட்டிப்போடும் மயக்கக்கூடிய அளவுக்கானது தான் என்றாலும், 1985 ல் வெளியான ‘சிந்து பைரவி’யின் சிந்து கேரக்டர் ரொம்பவே ஸ்பெஷல் எனலாம்.
புகழின் உச்சத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பாடகர் ஜே.கே.பி-யின் ( சிவக்குமார்) வாழ்க்கையில் ஓர் இளம்பெண் (சிந்து) குறுக்கிடுகிறாள். “நீங்கள் பாடும் தெலுங்குக் கீர்த்தனைகள் அருமை. ஆனால் அது மக்களுக்குப் புரியும் மொழியில் இருக்க வேண்டாமா? வெகுஜனத்திற்கும் உங்களின் கலை சென்று சேர்வதுதானே தர்மம்?” என்று ஒரு கச்சேரியின் நடுவில் கேட்கிறாள்.
முதலில் ஆத்திரப்பட்டாலும் அதிலுள்ள நியாயம் ஜே.கே.பி-க்கு பிறகு புரிகிறது. தமிழிசையில் பாடல்கள் பாடத் தொடங்குகிறார். இசை குறித்து யாரிடமாவது பேச முடியாதா என்று தவித்துக் கொண்டிருக்கும் பாடகருக்கு, சிந்துவின் நட்பு பாலைவனச்சோலையாக அமைகிறது. இருவருக்குள்ளும் ஏற்படும் நட்பு, காதலாக மாறுகிறது. திருமணம் தாண்டிய உறவாக மலர்கிறது.
தன்னிடம் நேசத்தை வெளிப்படுத்தும் பாடகரிடம் முதலில் கோபித்துக் கொண்டு, பிறகு தன்னிடமே அந்தக் காதல் இருப்பதை வாக்குமூலமாகத் தந்து “இனிமே உன்னைச் சந்திக்க மாட்டேன்னு பைரவி ( சிவக்குமார் மனைவி) கிட்ட சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன்” என்று பாடகர் சொன்னதும், முகம் செத்துச் சட்டென்று சுதாரித்துக் கொண்டு விடைபெறுவது என்று பல காட்சிகளில் சிந்துவின் பாத்திரமும், அவருக்கு உள்ள பிளாஷ்பேக் கதையில் வெளிப்படும் அவரது நடிப்பும் நம்மை உருக வைத்துவிடும்.