கேலோ இந்தியா போட்டிகள்: பிரதமரின் பாராட்டு… உதயநிதிக்கு முதலமைச்சர் கொடுத்த ‘டாஸ்க்’!
‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி’களுக்கான தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியின் பாராட்டும், விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உயர்த்துவது தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த ‘டாஸ்க்’கும் விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. ஜனவரி 23 தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன.
தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் முதல்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக (DEMO Sports) இடம் பெறுகின்றன. 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.
பிரதமரின் பாராட்டும் உத்தரவாதமும்
இந்த நிலையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான சுடரை ஏற்றி வைத்து, போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கேலோ இந்தியா விளையாட்டு சின்னத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் படம் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரமங்கை வேலுநாச்சியார் பெண் சக்திகளின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அனைத்து தரப்பு மக்களும் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்ற கேலோ இந்தியா போட்டி வழிவகுக்கிறது. சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, பாரா, மாரியப்பன் ஆகிய சிறந்த வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள்” எனப் பாராட்டினார்.
மேலும், “2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். நமது இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நேரடி அனுபவம் கிடைக்க வேண்டும். உலக விளையாட்டு சூழலமைப்பின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுக்கள் தொடர்பான துறைகளில் தங்கள் எதிர்கால தொழில் பாதையை அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்துக்கு எனது உத்தரவாதம் உண்டு” என்றும் உறுதி அளித்தார்.
“கனவு நனவாகிய தருணம் இது”
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு நனவாகிய தருணம் இது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், “கல்வி, மருத்துவம் மட்டுமல்ல விளையாட்டு துறையிலும் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே பல சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறோம். உலகமே பாராட்டும் அளவிற்கு 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை திராவிட மாடல் அரசு நடத்தியது.
தமிழ்நாடு அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் 3.5 லட்சம் வீரர்கள் பங்கேற்றனர். தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்க 76 புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.
உதயநிதிக்கு முதலமைச்சர் கொடுத்த ‘டாஸ்க்’
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ “எல்லார்க்கும் எல்லாம்” – “அனைத்துத் துறை வளர்ச்சி” – “அனைத்து மாவட்ட வளர்ச்சி” – “அனைத்து சமூக வளர்ச்சி” என்பதை உள்ளடக்கமாக கொண்ட நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக் கொண்டு வருகிறோம்.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி நம் இலக்கோ அதேபோல, தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவதும் நம்முடைய குறிக்கோள். இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்களை நான் பாராட்டுகிறேன். விளையாட்டுத் துறையில், தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈர்க்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும்” என்று கேட்டுக் கொள்வதாக கூறி, உதயநிதிக்கான அடுத்த ‘டாஸ்க்’கை கொடுத்தார்.
முதலமைச்சரே கொடுத்த ‘டாஸ்க்’ இது… நிறைவேற்றிக் காட்டாமலா போய்விடுவார் அமைச்சர் உதயநிதி..?!