சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய கட்சியின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ‘நாங்கள் ஈ.டி-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம்’ என ஒன்றிய அரசுக்கு எதிராக முழங்கி அதிரவிட்டதோடு, தமிழகம் கேட்ட வெள்ள நிவாரண நிதியில் இதுவரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “கல்வி, சுகாதாரம் என்று எல்லா துறைகளிலும் மாநில அரசின் உரிமைகளை சட்டத்திற்கு புறம்பாக ஒன்றிய அரசு பறித்து வைத்திருக்கிறது. முக்கியமாக வரி வருவாய். நம்மிடம் அதிகமான வரியை பெற்றுக் கொண்டு, நமக்குத் திருப்பி கொடுப்பதே இல்லை. நாம் ஒரு பைசா ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தினால், நமக்கு அவர்கள் திருப்பி தருவது வெறும் 29 காசுகள்.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணம் எவ்வளவு கட்டியிருக்கிறோம் தெரியுமா, கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் வரியாக கட்டி இருக்கிறோம். ஆனால், அவர்கள் நமக்கு திருப்பி கொடுத்தது வெறும் 2 லட்சம் கோடி ரூபாய் தான்.
கேட்ட நிதியைத் தந்தார்களா?
இப்படிச் செய்வதால் மாநில அரசு மக்களுக்கான திட்டங்களில் செயல்படுத்துவதில் செயல்பட முடியாத ஒரு சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது. அதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் வந்த அந்த மழை வெள்ளம். மிகப்பெரிய சேதாரம். அப்பொழுது நம்முடைய முதலமைச்சர் வேண்டுகோள் வைத்தார்கள். `பணம் கொடுங்கள் இழப்பீடு கொடுக்க வேண்டும் மக்களுக்கு’ என்று சொன்னார்கள். அப்போது ஒன்றிய அமைச்சர் என்ன சொன்னாங்க ‘நாங்கள் என்ன ஏ.டி.எம் மெஷினா?’ என்று கேட்டார்கள்.
அதற்குதான் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ‘நாங்க என்ன உங்க அப்பன் வீட்டு பணத்தைக் கேட்கிறோமா’ என்று கேட்டேன். அதற்கு அந்த நிதியமைச்சருக்கு பயங்கர கோபம். டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை வைத்து, கிட்டத்தட்ட அரை மணி நேரம் எனக்கு பாடம் எடுத்தார்கள்.
நான் உடனே, அடுத்த நாள் சொன்னேன், அம்மா நான் மரியாதையாவே கேட்கிறேன் “மாண்புமிகு அமைச்சர் அவர்களே நான் உங்கள் மாண்புமிகு அப்பா வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை என்று சொன்னேன். அவர்கள் கேட்ட மரியாதையை நான் கொடுத்து விட்டேன் நாம் கேட்ட நிதியைத்தான் இதுவரைக்கும் ஒரு பைசா கூட திருப்பிக் கொடுக்கவில்லை.
அதேபோல் நம்முடைய கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை வேலை வாய்ப்பு உரிமை, அதிகாரக் குறைப்பு, பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று நம் மீது மிகப்பெரிய அளவில் ஒன்றிய அரசுத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.
‘ஈ.டி-க்கோ மோடிக்கோ பயப்பட மாட்டோம்’
அதேபோல இந்த இயக்கத்தைப் பயமுறுத்த நினைக்கிறார்கள். ஈ.டி, சி.பி.ஐ, ஐ. டி ரெய்டுகள் அப்படியென்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நாங்கள் ஈ.டி-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம்.
உங்களுடைய இந்த உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் திமுக தொண்டன் இல்லை, திமுக தொண்டன் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சாதாரண கைக்குழந்தைகூட பயப்படாது. அதற்கு காரணம் நமக்கு கிடைத்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் அப்படிப்பட்டவர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய மொத்த உருவமாக இங்கே அமர்ந்திருப்பவர்தான் நம்முடைய தலைவர் அவர்கள். திமுக என்றைக்குமே தொண்டர்களை கைவிட்ட வரலாறு கிடையாது. தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அதற்கு கட்சி தலைவரே களத்தில் இறங்கி நிற்பார் அதுதான் திமுக” எனப் பேசி அதிரவிட்டார் உதயநிதி.