சமீப காலமாக நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் அமைந்திருக்கும் வணிக வளாகங்கள், கண்காட்சி நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில், அங்கு வரும் குழந்தைகளை ஈர்க்கும் விதமாக ‘ஸ்மோக் பிஸ்கட்’ விற்கப்படுகிறது. இந்த பிஸ்கட்டை சாப்பிடும்போது வாயில் இருந்து புகையாக வரும் என்பதால், அதை வேடிக்கையாகவும் கருதி, சிறுவர்கள் அதை மிகவும் விருப்பத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆபத்தை உணராத பெற்றோர்
தங்களது குழந்தைகள் வாங்குவதால், சமயங்களில் பெற்றோர்களும் அதை வாங்கி உண்கின்றனர். ஆனால், அதை சாப்பிடும்போது வரும் புகையானது ‘திரவ நைட்ரஜன்’ (Liquid nitrogen) என்னும் ரசாயனம் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த திரவ நைட்ரஜனை கையாளுவதற்கு நன்கு அனுபவமும், முறையான சாதனங்களும் வேண்டும். ஆனால், இதை உணராமல் பெற்றோர்களும் இதை வாங்கி கொடுத்துவிடுகின்றனர்.
அந்த வகையில் , கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் ஒருவன் வலியால் துடிதுடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தேவனகிரி என்ற பகுதியில் நடைபெற்ற “Robotic Birds Exhibition” என்ற கண்காட்சியில் இந்த ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அப்போது அங்கே குடும்பத்துடன் வந்திருந்த ஒரு சிறுவன், இந்த பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். அந்த சிறுவன் அதை சாப்பிடும்போது அவனது மூக்கு மற்றும் வாயில் இருந்து புகை வந்த நிலையில், அந்த சிறுவனும் வயிற்றுக்குள் ஏற்பட்ட எரிச்சல் உணர்வால் கதறி அழுதான்.
அதனைக் கண்ட அவனது பெற்றோர், உடனே அந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கும் உணவு பாதுகாப்புத் துறை
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய இது குறித்த வீடியோ, பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள் உள்பட பலரும் இந்த பிஸ்கட்டை சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த Liquid Nitrogen திரவ நிலையில் உள்ள ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும். இதன் வெப்ப நிலை − 196° செல்சியஸ் ஆகும். இது எந்த பொருளையும் உடனடியாக உறைய வைக்கும். பெரும்பாலும் இதை தொழிற்சாலைகள், ஆய்வக பரிசோதனை கூடங்களில் பயன்படுத்துவார்கள். பல்வேறு நாடுகளில் உறைந்த உணவு பொருள்களுக்கு இதை பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்மோக் பிஸ்கட்டை (Smoke Biscuits)குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
“திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம். திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறை பனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண்பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து ஏற்படும். மேலும், திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயைச் சிதைக்கிறது.
எனவே, உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்துள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வண்ணத்திலான பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இதில் ரோடமின் – பி எனப்படும் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு என்பதால் அதை விற்பனை செய்தல், பொது நிகழ்வுகளில் உணவுகளுடன் பரிமாறுதல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.