1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’, 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வாய்ப்பு ஏற்படுவதற்கான இன்னொரு மகிழ்ச்சியான தகவலும் வெளியாகி உள்ளது.
மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால், மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு மாநிலங்கள், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் இந்த திட்டத்தின் பயன், தொடக்கப் பள்ளி மாணவர்களையும் தாண்டி, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் பயனளிக்கிறது என்ற நெகிழ்ச்சியான தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பரிசீலனை
அதாவது, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சிற்றுண்டி உண்ட பின், மீதமிருக்கும் உணவு வீணாவதில்லை; மாறாக, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் யார் காலை உணவு சாப்பிடாமல் வந்துள்ளனர் என்பதை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் கண்டறிந்து, அவர்களுக்கு அந்த உணவை வழங்குகின்றனர். இதனால், மீதமாகும் உணவு வீணாகாமல் தடுக்கப்படுவதோடு, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்களில் பசியோடு இருப்பவர்களும் பயனடைகின்றனர்.
இது குறித்த தகவலை, தனது X தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த திட்டத்தினால் கிடைக்கும் பலனை கருத்தில்கொண்டு, “கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் ‘காலை உணவு திட்டத்தை’ விரிவாக்கம் செய்வது குறித்து, வரும் நிதி நிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
12 ஆம் வகுப்பு வரை நீட்டிப்பு?
இந்த நிலையில், ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வாய்ப்பு ஏற்படுவதற்கான இன்னொரு மகிழ்ச்சியான தகவலும் வெளியாகி உள்ளது.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 1 முதல் 12 ஆம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் வரலாம். வரும் பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது ” என்று கூறியுள்ளார்.
தாம் எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்தாலும், இந்த காலை உணவுத் திட்டம்தான் தனக்கு மன நிறைவைத் தருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பலமுறை சொல்லியுள்ளதால், காலை உணவுத் திட்டம் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நீட்டிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கே தமிழகத்தின் இன்னொரு முன் மாதிரி திட்டமாக அமையும் என நிச்சயம் சொல்லலாம்!