கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன.
முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு வைரமுத்து எழுதிய இந்த ‘மகா கவிதை’ நூலை, கடந்த ஜனவரி 1ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், இந்த நூல் பரவலான கவனம் பெற்றது.
நிலம், – நீர், – தீ,- வளி, – வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு – சிறப்பு குறித்து, விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெருங்கவிதை நூல் ‘மகா கவிதை’.
இந்த நிலையில், இது சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ் விருது’ பெறுவதாக மலேசிய இந்தியக் காங்கிரஸின் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் அறிவித்தார்.
மலேசியப் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களும், தேர்ந்த திறனாய்வாளர்களும் அடங்கிய 12 பேர் குழு, பெருந்தமிழ் விருதுக்கு மகா கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
வருகிற மார்ச் 8 ஆம் தேதி, மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் புகழ்பெற்ற உலக வர்த்தக மையத்தில்,‘மகா கவிதை’ நூலுக்காக கவிஞர் வைரமுத்துவிற்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்கப்பட உள்ளது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும், தமிழ்பேராயமும் இணைந்து இந்த விருதை வழங்குகிறது.
இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, “விருது சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். 90 வயது வரை யாரும் காத்திருக்க வயது இல்லை, பொறுமையும் இல்லை, விருது வழங்கும் நிறுவனத்திற்கு நான் வைக்கும் கோரிக்கை இல்லை, எனது ஆதங்கம். தமிழகத்தில் உள்ள பல நூல்களில், மகா கவிதை நூல் விருது பெற்றது தமிழ் இட்ட கட்டளை என்று நான் கருதுகிறேன்.
இந்திய புத்தகத்திற்கு மலேசியா விருது வழங்க உள்ளது. ஆனால் இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் விருது, தமிழ் மொழிக்கு எத்தனை முறை ஞான பீடம் விருது வழங்கியுள்ளது? இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் இதுவரை 58 விருதுகள் வழங்கியுள்ளது.
இந்தி மொழிக்கு 11 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாளம், வங்காளம் மொழிக்கு 6, உருது மொழிக்கு 5 முறை. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு 2 முறை மட்டுமே அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே விருது கொடுத்துள்ளது ஞான பீடம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
‘ஞான பீடம்’ விருது குறித்து வைரமுத்து நீண்ட நாட்களாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். விகடனில் தொடராக வந்த அவரின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நூலுக்கு 2003-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தபோதிலும், அப்போதே அவர் அதற்கு ஞானபீட விருதை எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தற்போதும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரது ஆதங்கம் உரியவர்களை எட்டுமா?