முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையில் ‘கலைஞர் காவியம்’ ஆக படைக்கப்போகிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அவரே எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. 1924 ல் பிறந்த கருணாநிதியின் பிறப்பு முதல் 2006 வரையிலான அவரது சுய வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் இப்புத்தகம், வெவ்வேறு காலகட்டங்களில் கலைஞராலேயே எழுதப்பட்டு, 6 பாகங்களாக வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கவிப்பேரரசு வைரமுத்துவின் புதிய படைப்பான ‘மகா கவிதை’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்த கலைஞர் அவர்கள் மட்டும் இருந்திருந்தால் மகா கவிதை தீட்டிய கவிபேரசு வைரமுத்து அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார். கலைஞரின் பாராட்டு மழையில் நனைத்த கவிப்பேரசு அவர்கள். இந்த கவிப்பேரசு என்ற பட்டத்தையும் கலைஞர் அவர்கள் வழங்கியதுதான்.
எல்லா நதியிலும் என் ஓடம் என்று பெயர் வைத்து இருந்தாலும், அது எப்போது வந்து சேறும் கடலாக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தார்கள். வைரமுத்து எழுதிய 15 புத்தகங்களை வெளியிட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். மகா கவி பாரதியின் வாழ்கை வரலாற்றை கவிராஜன் கதை என்ற பெயரில் எழுதியது போல் தலைவர் கலைஞரின் வாழ்கை வரலாற்றை கவிதையாக நீங்கள் தர வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள். உங்கள் தமிழில் கலைஞரின் வரலாறு வந்தாக வேண்டும் என்பது உங்கள் ரசிகனின் வேண்டுகோள். இன்னும் உரிமையோடு சொல்லப்போனால் அது கட்டளை.
கவிப்பேரசு அவர்கள் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும், அதனை வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எனது மகா ஆசை. நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களை பற்றிய கவிதை தொகுப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். தொல்காப்பியம் தொடங்கிய இடத்திற்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் கவிப்பேரசு வைரமுத்து.
சமீபத்தில் ஏற்பட்ட புயல் – மழை – வெள்ளம் ஆகியவை சூழலியல் பிரச்னைகள் மீது அதிகமான கவனத்தை ஈர்க்கின்றன. அதைப் போலவே கவிப்பேரரசு அவர்களின் மகா கவிதையும் ஐம்பூதங்கள் மீதான அக்கறையை அதிகரிப்பதாக அமைந்துள்ளது. இந்நூலை – கருத்து வாளை, அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கவிதைகளைப் படிப்பதோடு, அதன்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கவிப்பேரரசு அவர்களே! உங்கள் தமிழ்க் கவிதையை தமிழ்நாடு பேசும்! இயற்கை மானுடம் பேசும்! இந்த ‘மகா கவிதை’யை உலகம் பேசும்!” என்றார்.
‘கட்டளையை கர்வமாக ஏற்கிறேன்‘
கலைஞரின் வாழ்கை வரலாற்றை கவிதையாக தர வேண்டும் என்ற முதலமைச்சரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “ நான் இந்த படைப்பை படைப்பதற்கு காரணம் இந்த பூமி உருண்டையின் மீது கொண்டிருக்கிற காதல். இந்த பூமியை நாம் காப்பாற்றாவிட்டால் யார் காப்பாற்றுவது? நிலக்கரி, பெட்ரோல் ஆகிய 2 புதைவடிவ எரிபொருளை கடந்து மனிதன் சூரிய சக்தியின் இயற்கை மின் சக்தியை கண்டறிந்தாலொழிய இந்த பூமியைக் காப்பாற்ற முடியாது. எரிபொருளுக்கு மாற்று சகதியை கண்டுபிடிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகள், உலக விஞ்ஞானிகள் முன்வர வேண்டும்.
‘அடுத்து கலைஞர் காவியம் எழுது. இது என் கட்டளை’ என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அரசாங்கம் போட்ட ஜி.ஓ-வை ( அரசாணை ) ஒரு ஏழை மாற்ற முடியுமா? உங்கள் கட்டளையை நான் கர்வமாக ஏற்றுக்கொண்டு செய்வேன்” என உறுதியளித்தார்.
வைரமுத்துவின் இந்த பேச்சைத் தொடர்ந்து, அடுத்து அவரது எழுத்தில் உருவாகப்போவது ‘கலைஞர் காவியம்’ ஆகத்தான் இருக்கும் என்பது உறுதியாகிறது. அப்படி வைரமுத்துவின் எழுத்தில் ‘கலைஞர் காவியம்’ படைப்பட்டால், அது தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமல்லாது; தமிழக அரசியல் வரலாற்றிலும் ஒரு மாபெரும் படைப்பாக இருக்கும்!