கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்திய பட்ஜெட்!
தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
ஏற்கனவே கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயர் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் 34 ஆயிரத்து 460 மாணவிகள் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளனர் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
இதுவரையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் அறிவித்தார். இதற்காக 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அதே போல காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் அதன் மூலம் கூடுதலாக 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அமைச்சர் அறிவித்தார். இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே போல உயர்கல்வி படிக்கும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டு கூடுதலாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இது தவிர நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க 2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.