இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் வாழ்க்கைத் தரம் பெரும்பாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைச் சார்ந்துதான் இருக்கிறது. அந்த வகையில், ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை சாத்தியமாக்குவது கல்விக்கடன் திட்டம் தான்.
2012 ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டாலும், கல்வியில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு இந்த திட்டத்தினை நன்கு பயன்படுத்தி வருகிறது. அப்படி கல்விக்கடன் பெற்று, தங்களது உயர் கல்வியை முடித்த ஏராளமான தமிழக மாணவர்கள் இன்று இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
கைதூக்கி விடும் கல்விக்கடன் திட்டம்
இதற்கு தமிழ்நாடு அரசு கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், அதன் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தும் விழிப்புணர்வுமே முக்கிய காரணங்கள் ஆகும்.
பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஆராய்ச்சி படிப்பு.. என உயர்கல்வி என்று வரும்போது ஆகும் கல்வி கட்டண செலவைக் கண்டு திகைத்து முடங்கிவிடாமல், மாணவர்களைக் கைதூக்கி விடுகிறது கல்விக்கடன் திட்டம்.
கடன் தொகை ரூ.4 லட்சம் வரை பெறுகின்ற மாணவர்கள் தங்கள் பங்காக எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. பெற்றோர்கள் கூட்டுக் கடன்தாரர்களாக இருந்தால் போதுமானது. குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.4.50 லட்சத்திற்குள் இருந்தால், கல்வி பயிலும் காலத்திற்கு அரசே வட்டிக்கான மானியத்தை வழங்குகின்றது.
நாளை கல்விக் கடன் முகாம்கள்
இத்தகைய வாய்ப்புகள் நிறைந்த கல்விக்கடனைப் பெற, மாநில அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு, கல்விக்கடன் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
வரலாற்றுச் சாதனை படைத்த மதுரை
இதனிடையே 2023-2024 ஆம் கல்வி ஆண்டில், மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.168 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டு , புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் தனது X சமூக வலைதளத்தில், “150 கோடியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை. தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்கப்படும் மாவட்ட சராசரி ரூ. 35 கோடி, மதுரை ரூ.168 கோடி. மும்பையைப் போல கல்விக்கடன் ஒப்புதல் 80 சதவிகிதம். தனியார் வங்கிகள் முதன் முறையாக 90 சதவிகிதத்திற்கு மேல் கல்விக் கடன் வழங்கியுள்ளன.
இவைகள் எல்லாம் இந்திய அளவில் மிகச்சிறந்த முன்னுதாரணம் ஆகும். இதற்காக தொடர்ந்து உழைத்திட்ட வங்கிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.