கல்லூரி மாணவர்களுக்கும் ரூ. 1,000 வழங்கும் திட்டம் அமலாகிறது… உயர் கல்வி முன்னேற்றத்துக்கான தமிழகத்தின் அடுத்த பாய்ச்சல்!

மிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளில், உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்திலும், மாணவிகள் உயர் கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையிலும், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் கல்வி காலம் முடியும் வரை அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் அறிவிக்கப்பட்டது.

‘புதுமைப் பெண்’ திட்டம்

அதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதியன்று இந்த ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ரூபாய் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு என கல்லூரிப் படிப்பை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த மாணவிகள் ஏற்கெனவே மற்ற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்தத் திட்டத்தின்கீழ் பலன் பெறலாம், அவர்களுக்கு இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படியே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகரித்த மாணவிகளின் சேர்க்கை விகிதம்

இந்த திட்டத்தினால், மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 30,000 மாணவிகள் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி செல்லும் மாணவியரின் எண்ணிக்கை 20 முதல் 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கும் ரூ.1,000

இந்த நிலையில், மாணவிகளுக்கு வழங்குவதைப் போன்றே அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்து உயர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம், வரும் கல்வியாண்டும் முதல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையை உயர்ந்திடும் வகையில் ‘தமிழ்ப் புதல்வன்’ என்னும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை முதல் அமல்

அதன்படி, அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், வருகிற ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

உயர் கல்வி முன்னேற்றத்துக்கான அடுத்த பாய்ச்சல்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் ‘நான் முதல்வன் கல்லூரி கனவு – 2024’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

மேலும், தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ – மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பிளஸ் 2 முடித்து உயர் கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டம், ‘தமிழ்ப் புதல்வன்’ போன்ற திட்டங்களும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கல்வித் துறைக்கு அளித்து வரும் முக்கியத்துவமும் உயர் கல்வி முன்னேற்றத்துக்கான தமிழகத்தின் அடுத்த பாய்ச்சலாகவே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Guerre au proche orient : trois soldats libanais tués, le hezbollah cible israël avec des roquettes. But іѕ іt juѕt an асt ?. Hest blå tunge.