Amazing Tamilnadu – Tamil News Updates

‘கலைஞர் 100’… தமிழ்த் திரையுலகின் கலக்கல் விழா!

லைஞர் கருணாநிதி தமிழ்த் திரையுலகில் தடம் பதிப்பதற்கு முன்பு வரை, ‘திரைப் படத்தில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குகிறார்கள்..?’ என்றெல்லாம்தான் மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவரது வருகைக்குப் பின்னர், ‘யார் வசனம் எழுதியிருக்கிறார்கள்?’ என்று மக்களைக் கேட்க வைத்து, திரைப்பட உலகில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தினார். இன்னும் சொல்லப்போனால் கதாநாயகனை தயாரிப்பாளர்கள் ‘புக்’ செய்வதற்கு முன்னர் கலைஞரை ‘புக்’ செய்தார்கள்.

‘பராசக்தி’ தொடங்கி, ‘மனோகரா’ , ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரி குமாரி’, ‘மலைக்கள்ளன்’ ‘பணம்’, ‘நாம், திரும்பிப் பார்’ என பிளாக் அண்ட் ஒயிட் காலம் தொடங்கி ‘வண்டிக்காரன் மகன்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘பாசப்பறவைகள்’, ‘உளியின் ஓசை’… எனச் சமீப கால சினிமா வரை தமிழ்த் திரைத்துறையில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் தனி முத்திரை பதித்தவர் கலைஞர்.

அவரது வசனத்தைப் பேசிக் காட்டியே சினிமா வாய்ப்பு பெற்றதாக தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் கூறியதுண்டு. கலைஞரை அத்தகைய பெருமையுடன் நினைவு கூரும் தமிழ்த் திரையுலகம், அவரைப் போற்றும் வகையில், கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

கலைஞரின் நூற்றாண்டு விழா தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பிலும், திமுக சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு அம்சமாகவே தமிழ்த் திரையுலகமும் கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பேசிய ‘ஃபெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, “கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது. இந்த விழாவை இந்தியாவிலேயே சிறந்த நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஜினி, கமல் உள்ளிட்டோரை அழைத்துள்ளோம். விஜய், அஜித் ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளோம். கலைஞர் நூற்றாண்டு விழாவில் 20 நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம். ஃபெப்சி சங்கத்தின் சார்பாக அனைத்து வேலைகளையும் நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம்.

திரைப்படம் மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கு சமூக நீதி, சமத்துவபுரம், உழவர் சந்தை, கை ரிக்ஷா ஒழிப்பு போன்ற சிந்தனைகளை சிந்தித்து அமல்படுத்திய கலைஞருக்கு, இந்த விழாவை முன்னெடுப்பது தான் நம் நன்றி. தமிழ் திரைப்படத் துறையினர் மட்டுமில்லாமல் இந்திய திரைப்பட துறையினர் அனைவரையும் ஒன்றுபட முயற்சி செய்து வருகிறோம் ” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version