Amazing Tamilnadu – Tamil News Updates

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’: ‘ஜும்லா’க்களுக்கு விழுந்த அறை!

குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகை வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’.

இத்திட்டத்திற்காக சுமார் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அண்ணா பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 15-ம் தேதியன்றும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாதம் 15-ம் தேதி ஞாயிறன்று வருவதால், ‘ஒரு நாள் முன்னதாக 14-ம் தேதியன்றே வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இந்த திட்டத்தில் எவ்வித புகாரும் எழுந்துவிடக் கூடாது என்பதில் அரசு எவ்வளவு அக்கறையுடனும் கவனமுடனும் உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளாலாம்.

கலைஞர் மகளிர் திட்டத்தின் வெற்றி

அதுமட்டுமல்ல, சட்டசபையில் இன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ குறித்த கவன ஈர்ப்புத் தீர்மான விவாதத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, நிபந்தனைகளை தளர்த்தியதால் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறும் 2 லட்சத்து 6 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும், முதியோர் உதவித்தொகை பெறும் 4 லட்சத்து 72 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும் கலைஞர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.

பொதுவாக எந்த திட்டத்திலும், திட்டப் பயனாளிகள் தேர்வு குறித்து மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை இருக்காது. ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தகுதியான மகளிரும் உரிமைத் தொகை பெறுவதில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் மேல்முறையீடு செய்து இந்த திட்டத்தின் பயனை பெறலாம் என்ற நிலையை நம்முடைய அரசு உருவாக்கியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆய்வுசெய்து, நவம்பர் 30-ம் தேதிக்குள் உரிய தீர்வை அளிப்பார்கள். அதுமட்டுமல்ல, ஏற்கனவே விண்ணப்பிக்காத பயனாளிகளும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. கலைஞர் மகளிர் திட்டத்தின் வெற்றி என்பது, தமிழ்நாட்டு மகளிரின் வெற்றியாகும்” என தெரிவித்தார்.

பெண்களை மேம்படுத்தும் ‘திராவிட மாடல் அரசு’

இதன் மூலம் ஒரு திட்டத்தை ஏதோ ‘அறிவித்தோம்… தொடங்கினோம்… நாளடைவில் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது’ போன்ற மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைப் போன்றல்லாமல், பெண்களை மேம்படுத்துவதற்கும் பாலின சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கும் அரசாங்க திட்டங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல் அரசு’.

ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘தான் திருடி, பிறரை நம்பாள்’ என்று. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ” வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டுவந்து, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நம்பி மக்கள் பாஜக-வுக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்தனர்.

பாஜக-வின் ‘ஜும்லா’ வாக்குறுதி

ஆனால், ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் கழித்தும், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என பொதுமக்கள் பாஜக-வினரிடத்தில் கேட்கத் தொடங்கியதும், உள்துறை அமைச்சர் அமித் ஷா 2015 -ம் ஆண்டு APB ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ” ரூ.15 லட்சம் தருவதாக நாங்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அது ‘ஜும்லா’ என்று சொன்னவர் அமித்ஷா. ஜூம்லா என்ற இந்தி/ உருதுச் சொல்லுக்குப் பொய்யான வாக்குறுதி, பொய்யான வாக்கியம், வெற்றுச் சொல் என்று பொருள்.

மற்றொரு அமைச்சரான நிதின் கட்கரியோ, ” நாங்கள் அதிகாரத்துக்கு வரமாட்டோம் என்று நினைத்து அப்படிச் சொல்லி விட்டோம். ஆனால் வந்து விட்டோம், என்ன செய்வது?” என்று 2018 -ம் ஆண்டு அக்டோபரில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இன்னொரு ஒன்றிய அமைச்சரான ராமதாஸ் அத்வாலே, ”ரிசர்வ் வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால் எங்களால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. விரைவில் ரூ.15 லட்சம் தந்து விடுவோம்” என்று 2018 டிசம்பரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். இன்னும்தான் அந்த 15 லட்சம் வந்துகொண்டிருக்கிறது.

மோடி – அமித் ஷா

இப்படி பொய் வாக்குறுதிகளை அளித்த பாஜக-வைச் சேர்ந்த தமிழ்நாட்டு தலைவர்கள்தான், முந்தைய அதிமுக அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டுப்போனதால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டபோது, “என்னாச்சு..?” என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்கள். அவர்களோடு சேர்ந்து பாஜக-வைத் தாங்கிக்கொண்டிருந்த அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அவரது அடிப்பொடிகளும் சேர்ந்து குதித்தார்கள். ஆனால், இவர்கள் ஒருபோதும் மோடியிடம், ” அந்த 15 லட்சம் ரூபாய் என்னவாயிற்று?” எனக் கேட்டதே இல்லை.

ஆனால், இதோ ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில்’ எந்தவொரு தகுதியான மகளிரும் உரிமைத் தொகை பெறுவதில் இருந்து விடுபட்டு விடக்கூடாது. மேல்முறையீடு செய்து இந்த திட்டத்தின் பயனை பெறலாம் என்ற நிலையை உருவாக்கி அதனை செயல்படுத்தியும் வருகிறது திமுக அரசு.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியம் என்பதையே திமுக அரசு, கலைஞர் மகளிர் உரிமை நிதித் திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. மக்கள் நலன்களுக்காக, குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்வதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்பதையும் இது காட்டுகிறது.

இதன் மூலம் விளிம்புநிலை மக்களை கைதூக்கிவிடுபவர்கள் யார், பணக்காரர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வருவது யார் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் அதற்கான தங்களது பதிலடியை நிச்சயம் கொடுப்பார்கள்…!

Exit mobile version