அருங்காட்சியகம், எழிலோவியங்கள், அந்தரத்தில் மிதக்கும் கலைஞர் என சென்னை, மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். சென்னை கடற்கரை காமராசர் சாலையில், 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் ‘அண்ணா நினைவிடம் – கலைஞர் நினைவிடம்’ எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணா சிலை, வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் உள்ளன.
கலைஞரின் எழிலோவியங்கள்
அதன் கீழ்ப்புறம், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என கலைஞர் 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன. அருகில், கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறை உள்ளது. அதில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் நம்மை கவர்ந்திழுக்கின்றன.
அடுத்து ‘உரிமைப் போராளி கலைஞர்’ எனும் தலைப்பை கொண்ட அறை. இதற்குள் நுழைந்தால் – தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் காட்சி அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டையில் முதன் முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கலைஞர் உரையாற்றும் காட்சி அமைப்புடன் பின்புறம் தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் பார்வையாளர்களை வரவேற்கிறது.
கலைஞரின் கலை, அரசியலைச் சொல்லும் படக்காட்சிகள்
அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம். இதன் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கு கிடைக்கும். வலப்புறத்தில் கலைஞரின் மெழுகுச் சிலை. இதற்கு பின், ‘அரசியல் கலை அறிஞர் கலைஞர்’ என்கிற அறை. இதி்ல் கலைஞரின் பெரிய நிழற்படம். வலப்பக்கம் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் எதிரில் வெள்ளித்திரை. அதில், ஏறத்தாழ 20 நிமிடங்கள் கலைஞரின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அருமையான படக் காட்சிகளாக, கலையும் அரசியலும் எனும் தலைப்பில் நம்முன் தோன்றுகிறது.
அப்பகுதியில் 5 தொலைக்காட்சி பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கலைஞர் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேர் எதிரே- கலைஞர், மு.க.ஸ்டாலின் தோன்றும் புகைப்படம் பெரிய அளவில் அமைந்து “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தொடரை தலைப்பாக கொண்டுள்ளது. இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையை பயன்படுத்தி அமர்ந்த நிலையில் கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் காட்சி நம்மை அற்புத உலகிற்கு அழைத்துச் செல்கிறது. நடைபாதையை விட்டு, வெளியே வந்தால், நேர் எதிரே கலைஞர் புத்தக விற்பனை நிலையம் அமைந்துள்ளது.
அங்கே, கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக கண்டு வெளியே வரும்போது, “கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர் கலைஞருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.