தமிழ்நாட்டின் நீண்ட அரசியல் வரலாற்றில், ஒரு பெயர் இணையற்ற முக்கியத்துவத்துடன் நிலைத்து நீடிக்கிறது என்றால் அது ‘கலைஞர் மு. கருணாநிதி’ என்ற பெயர்தான். மாநிலத்தின் சமூக-அரசியலில் ஓர் அழியாத தடத்தை மிக ஆழமாக பதித்துவிட்டுச் சென்ற ஒரு மகத்தான தலைவரான கலைஞரின் பிறந்த நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதையொட்டி, நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
ரூ.100 மதிப்பில் கலைஞரின் நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை, ஒன்றிய நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நாணயத்தை வடிவமைக்கும் பணி நிதி அமைச்சகத்தால் நடைபெற்று வருகிறது.
நாணயத்தின் ஒருபுறத்தில் கருணாநிதியின் சிரித்த முகத்துடன், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு 1924-2024’ என ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும், ‘பாரத்’ என இந்தியிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தேச வடிவத்தில் மாற்றங்கள் இருந்தால், அதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு , நினைவு நாணயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞருக்கான இந்த நூற்றாண்டு நினைவு நாணயம், வெறும் 100 ரூபாய் மதிப்பு கொண்ட ஓர் உலோகத் துண்டு அல்ல. மாறாக காலத்தால் அழியாத அஞ்சலி ஆகும். மேலும் சமூக நீதி, சமத்துவம், கல்வி, பொருளாதாரம், தொழில்துறை முன்னேற்றம், உட்கட்டமைப்பு வளர்ச்சி என அவர் தமிழ்நாட்டின் பன்முக வளர்ச்சிக்காக செய்துவிட்டுச் சென்ற அவரது மகத்தான பணிகளுக்காக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் செய்கிற பதில் மரியாதை மற்றும் கெளரவமும் கூட!
அவரது பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான கலைஞரின் அர்ப்பணிப்பை நினைவு கூர்வது அவசியம். நாணயத்தில் இடம்பெறப்போகும் அவரது புன்னகை, கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் அவர் விதைத்துவிட்டுச் சென்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கலைஞர் கருணாநிதி ஆற்றிய தொண்டுகள் காலங்கள் கடந்தும், வருங்கால தலைமுறையினரால் நிச்சயம் நினைவு கூரப்படும்.