கலைஞரின் சொத்துரிமை சட்டம்… குபேர லட்சுமியான எம்ஜிஆர் ரசிகை… X தளத்தில் கவனம் ஈர்த்த பதிவு!

ன்றைக்கு நாடு முழுவதும் பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை உள்ளது. 2005 ஆம் ஆண்டு, தேசிய அளவில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டப் போதிலும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் பின்னடைவைச் சந்தித்து, ‘கொடுக்கலாம்’ என 2020 ஆகஸ்ட் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின்னரே, அதனை நாடு முழுவதும் செயல்படுத்த முடிந்தது.

ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக, 1989 ஆம் ஆண்டிலேயே தனது ஆட்சிக் காலத்தில், ‘பெண்களுக்கு சொத்தில் சம பங்கு’ எனும் உரிமையை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு, தனிச்சட்டமாக இயற்றினார் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி. அந்த வகையில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது அவர் கொண்டு வந்த அந்த சட்டம்.

“இந்த சட்டம் மட்டுமல்ல; பெண்களுக்கு இதுபோன்ற எண்ணற்ற முற்போக்கான திட்டங்களைத் தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தியவர் கலைஞர். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்தலைவர்/தலைவி முதல் பிள்ளைகள், முதியோர்கள் வரை கலைஞர் கொண்டு வந்த ஏதாவது ஒரு திட்டத்தினால் பயனடைந்தவர்களாகவே இருப்பார்கள்” என திமுக தரப்பில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி வாதிடுவது உண்டு.

அந்த வகையில் கலைஞர் கொண்டு வந்த பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தால் தீவிர எம்ஜிஆர் ரசிகை ஒருவர் எப்படி பயனடைந்தார் என்ற சுவாரஸ்யமான நிஜ நிகழ்வு ஒன்றை தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் டீ ( teakkadai1) என்ற பெயரில் எழுதி வரும் பதிவர் ஒருவர். அருகில் இருந்து பார்ப்பதைப் போன்று, சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்த பதிவு, X தளத்தில் திமுக எம்பி செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டைப் பெற்று, கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த பதிவு இங்கே…

நாங்கள் திருமணமான புதிதில் சென்னையில் வசித்து வந்தோம். அப்போது எங்கள் வீட்டிற்கு பணிகள் செய்ய உதவியாக வந்தவர் குப்பம்மா. அப்போது அவர் மூன்று வீடுகளில் வேலை செய்து வந்தார். ரொம்ப கரெக்டாக இருப்பார் என்று அவரை சிபாரிசு செய்தவர் சொன்னார். அது போலவே அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக வருவார். வேறு எதுவும் பேச்சுகள் இல்லாது பணிகளை முடித்து விட்டு, சென்று விடுவார். ஒரு ஞாயிறு மாலை, அவர் வேலை முடித்து விட்டுச் செல்ல யத்தனிக்கும் போது பெரு மழை பிடித்துக் கொண்டது. ‘மழை நிற்கும் வரை இங்கே இருங்கள்’ எனச் சொல்லிவிட்டு, டிவி பார்க்கத் துவங்கினோம். விளம்பர இடைவேளையில், சேனல் மாற்றும் போது ஒரு எம்ஜியார் பாட்டு வந்தது. அது வரை அசுவராசியமாக டிவி பார்த்தவர், நிமிர்ந்து உட்கார்ந்தார். நானும், ‘எதுவும் கேட்காதவர் விரும்பி பார்க்கிறாரே…’ என சேனல் மாற்றவில்லை.

அது எங்களுக்குள்ளான ஒரு பாசப் பிணைப்பு துவங்க ஒரு புள்ளி எனச் சொல்லலாம். டிவி-யில் எம்ஜியார் படம் ஒளிபரப்புவதாக தெரிந்தால், எங்கள் வீட்டில் வந்து பார்ப்பார். எங்கள் முதல் குழந்தை பிறந்த போது அவராகவே பணிகளை எடுத்துப் போட்டு செய்தார். அதே போல அவருக்கு காபி தான் பிடிக்கும். மற்ற வீடுகளில் அப்போது என்ன செய்கிறார்களோ அதைத் தருவார்கள். எங்களிடத்தில் அவரே உரிமையாக காபி போட்டுக் கொள்வார். போதாக்குறைக்கு நான் பிறந்த ஊருக்கு அருகே தான் அவர் ஊரும். இப்படியாக எங்களிடையேயான இறுக்கம் தளர்ந்த நாட்களில் தன் குடும்பக்கதையை பகிர்ந்து கொண்டார்.

அவர் நல்ல வசதியான விவசாயக் குடும்பத்தில் நான்கு அண்ணன்களுடன் பிறந்தவர். அவர் திருமணத்தின் போது அவருக்கு 5 பவுன், மாப்பிள்ளைக்கு 1 பவுன், ஒரு சைக்கிள், ஒரு வாட்ச், மற்றும் பாத்திர பண்டங்கள் கொடுத்து ஊர் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் கணவரும் தன்மையானவர். அவருடன் பிறந்தவர்கள் அக்கா, தம்பியென நால்வர். பெரிய வசதி இல்லாத குடும்பம். இவர்களுக்கு மணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. குப்பம்மாவின் திருமணத்திற்குப் பின் அவர் அப்பா, அம்மா இருவரும் நான்காண்டு கால இடைவெளியில் இறந்து போய் விட்டனர்.

பேரிடியாக அவர் கணவர் விவசாய வேலைக்குப் போன போது பாம்பு கடித்து இறந்து விட நிர்க்கதியானார் குப்பம்மா. புகுந்த வீட்டில் அவர் இருக்க முடியாத சூழல் நிலவியது. பிறந்த வீட்டிலும், அவரை ஏற்றுக் கொள்ள யாரும் விரும்பவில்லை. எனினும் சம்பளமில்லா வேலைக்காரியாக அங்கே தன்னை மாற்றிக் கொண்டார். அத்தனை வேலைகள் செய்தாலும், அத்தனை பேருக்கு சமைத்தாலும் கடைசியாக மிஞ்சும் உணவையே உண்ணும் நிலை.

“அதெல்லாம் கூடப்பரவாயில்லை தம்பி, எனக்கு என்னவோ சின்ன வயசில் இருந்தே எம்ஜியார் படம்னா பிடிக்கும். எங்க ஊர்ல எப்ப எம்ஜியார் படம் வந்தாலும் ரெண்டு மூணு வாட்டி பார்த்திடுவேன். என் வீட்டுக்காரருக்கும் எம்ஜியார்னா உசுரு. மதுரைக்கு போனா படம் பார்த்துட்டு கிளப் கடையில் ஒரு காப்பி சாப்பிட்டுத்தான் வருவோம் தம்பி. அப்படித்தான் எனக்கு காப்பி பழக்கம் வந்துச்சு. அது என்னமோ காப்பி எனக்கு பிடிச்சுப் போச்சு. இவங்க கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன். எப்பவாச்சும் எம்ஜியார் படம், என்னைக்காச்சும் அர வாய் காப்பி. ‘மூளியா வந்தவ மூலையில உட்காராமா என்ன படம் வேண்டிக்கிடக்கு? நாக்கு ருசி கேட்குதோ..?’ ன்னு நாத்தனார் காரிக கரிச்சுக் கொட்டுவாங்க. அண்ணன்களும் ஏதும் சொல்ல மாட்டாங்க.

‘ஏன் எனக்குன்னு என்னதான் அப்புறம்..?’னு ஒரு நாள் பஸ் ஏறி இங்க வந்துட்டேன். இங்க பொழைச்சுக்கிலாம்னு. மகராசனை நேரில பார்க்கனும்னு ஒரு ஆசையும் இருந்துச்சு. நான் வந்து கொஞ்சநாள்ல அவரும் போய்ச் சேர்ந்துட்டார். அப்படியே இங்க மிச்ச காலத்த கழிச்சிருவோம்னு இருந்துட்டேன். மனசு சரியில்லன்னா பீச்சுக்கு போயி அவர் சமாதியைப் பார்த்துட்டு வருவேன். அப்ப என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லுவேன், ‘பாருய்யா உன் கூட வாழவும் எனக்கு கொடுத்து வைக்கல, நீ வாழ்ந்த இடம், உன்னைய பொதச்ச இடம் எதுக்குமே நான் போய் பொழங்க கொடுத்து வைக்கல, என் மூலமா உனக்குப் பிடிச்ச எம்ஜியாரைப் பாரு’ன்னு”.

ஆற்றாமையில் கொட்டிவிட்டு, சொன்னார், “எங்க அப்பாக்கு எங்க ஊர் சாமிக்கு பூ அலங்காரம் விசேசத்துக்கு செய்யனும்னு ஆசை. அவர் இருந்தவரைக்கும் திருவிழா தவறாம கொடுத்துடுவார். இப்ப அண்ணன்க செய்யுறாங்களான்னு தெரியாது, நீங்க உங்க ஊருக்குப் போகும் போது, ஒரு எட்டுப் போயி, எங்க ஊர் கோயில்ல எங்க அப்பா பேரைச் சொல்லி பூ அலங்காரத்துக்குன்னு நான் கொடுக்கிறத கொடுங்க” என்பார். அதன்படி அவ்வப்போது கொடுப்பேன்.

2006 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தது. திமுக வெற்றி பெற, பெற மகிழ்ச்சியோடு இருந்து கொண்டிருந்தேன். ஸ்வீட் வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது குப்பம்மா வீட்டுக்கு வந்தார். ‘அம்மா ஸ்வீட் சாப்பிடுங்க…’ என்ற உடன், ‘என்ன இவ்வளோ சந்தோஷம்..?’ என்றார். ‘எங்க கட்சி ஜெயிச்சிருச்சு’ என்றேன். அவர் முகம் களை இழந்தது. ‘என்ன தம்பி, நீங்க கலைஞர் கட்சியா?’ என்றார். ‘ஆமா… அவரை ரொம்ப பிடிக்கும்’ என்றேன். ‘அவருக்கு நிறைய சம்சாரம், எங்க எம்ஜியாருக்கு அவரைப் பிடிக்காதே’ என்றார். ‘சம்சாரம் அவங்க குடும்ப பிரச்னை. மக்களுக்கு நல்ல நல்ல திட்டம்லாம் கொண்டு வந்திருக்கார்’ என்றேன். ‘எனக்கு என்னவோ அவரைப் பிடிக்காது தம்பி’ என முடித்துக் கொண்டார்.

ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி என கலைஞரின் திட்டங்கள் குப்பம்மாவுக்கும் நன்மை அளித்தன. ‘பார்த்தீங்களா எங்க ஆட்சியை?, இப்ப எம்ஜியார் படத்தை நீங்க எப்ப வேணுமுன்னாலும் பார்க்கலாம்…’ என கிண்டலடித்தேன். அவரோ, ‘போங்க தம்பி, எங்க அம்மா வந்திருந்தாலும் கொடுத்திருக்கும்’ என முடித்துக் கொண்டார்.

அடுத்த சில ஆண்டுகளில் வேறு ஊருக்கு செல்ல வேண்டிய சூழல். ‘எங்க கூட வந்திருங்க’ என்று சொல்லிப் பார்த்தோம். அவருக்கோ சென்னை தான் மனதுக்கு உகந்ததாய் இருந்தது. என் மனைவிக்கு குப்பம்மாவை விட்டு பிரியவே மனம் இல்லை. ‘நான் எங்க வீட்டுல இருந்த மாதிரியே இங்க இருந்தேன், உங்கனால…’ என கண்ணீர் சிந்தினார். மகன் கூட, ‘பாட்டி நம்ம கூட வரல்லையா..?’ எனக் கேட்டான்.

அவர் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த வீட்டுக்காரர்களின் எண்களை வாங்கிக் கொண்டேன். தீபாவளி போன்ற விசேச நாட்களில் அவருக்கு பேசுவோம். ஊருக்குப் போகும் போது அவர் அப்பா பெயர் சொல்லி பூ அலங்கார காணிக்கையும் அவ்வப்போது கொடுப்பதுண்டு.

திடீரென ஒரு நாள் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். குப்பம்மாவின் உறவினர்களாம். கோவில் பூசாரி மூலம், நான் குப்பம்மா தந்தை பெயரில் பூவுக்கு காசு கொடுப்பது அறிந்து, என் ஊரில் விசாரித்து இங்கே வந்துவிட்டார்கள். வேறு ஒன்றும் இல்லை. அவர்கள் தந்தை இறந்த உடன் வீடு, சொத்துகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவர்களிடம் அப்போது இருந்த நாப்பது ஏக்கர் நஞ்சை, நாலு வீடுகளை சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள். அப்போது ஊரை விட்டு வெகு தொலைவில் இருந்த இரண்டரை ஏக்கர் வானம் பார்த்த பூமியை, பேச்சு வார்த்தை சரி வராமல் விட்டு வைத்திருந்திருக்கிறார்கள். அதில் உடனடி வருமானமும் இல்லாததால், அப்படியே போட்டு வைத்து விட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமாகிக் கொண்டே வர, அது அப்படியே பொதுச் சொத்தாக இருந்து கொண்டே இருந்தது.

இப்போது அந்தப் பக்கம் ஒரு மேம்பாலம், நான்கு வழிச் சாலை, ஏராள கேட்ட் கம்யூனிட்டி குடியிருப்புகள் வர வர, அந்தப் பகுதியின் நில மதிப்பு விண்ணைத் தொட்டது. புகழ்பெற்ற ஒரு கட்டுமான நிறுவனம் அந்தப் பகுதியில் கால் பதிக்க இவர்களின் இடத்தை தேர்வு செய்தது. 500 கோடிக்கும் மேற்பட்ட புராஜக்ட். எனவே, பத்திரம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டுமென அவர்கள் லீகல் டிபார்ட்மெண்ட் ஒப்பீனியன் கொடுக்க, உள்ளூரில் விசாரித்தது அவர்கள் டீம். ‘ஒரு பெண் வாரிசு இருக்கிறார். அவர் கையெழுத்து இருந்தால் தான் அது செல்லும்’ என கலைஞர் 1989ல் போட்ட பெண்ணுக்கு சொத்தில் உரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி சொல்ல, அவரைத் தேட ஆரம்பித்து என்னிடம் வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பகுதியில் இப்போதைய சென்ட் மதிப்பு பத்து லட்சம். ரெண்டரை ஏக்கருக்கு 25 கோடி வரும். ஐந்தாகப் போட்டு 5 கோடி கொடுங்கள் எனக் கேட்டேன். இதை குப்பம்மாவிடமும் தெரிவித்தேன். அவரோ அதிர்ச்சி அடைந்தே விட்டார். பின்னர் ஊர்காரர்கள், அவங்க கொடுக்குறத வாங்கிக் கொடு தம்பி, இல்லேன்னா வண்டி ஏத்தி தூக்கி விட்டுருவாங்க அவங்க அண்ணன் பிள்ளைக என்றார்கள். இறுதியில் 3 கோடி என முடிவானது.

பத்திரப்பதிவு நாளும் வந்தது. கம்பெனி, பணத்தை நேரடியாக குப்பம்மாவிடம் கொடுத்தது. சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நானும் அவருடன் சென்றேன். சார்பதிவாளர் முன்னிலையில் போட்டோ எடுத்து கையெழுத்து இடும்போது தான் கவனித்தேன், குப்பம்மாவின் உண்மையான பெயர் குபேர லட்சுமி.

சார்பதிவாளரின் தலைக்கு மேல் மஞ்சள் சால்வை அணிந்த கலைஞர் சிரித்துக் கொண்டிருந்தார். ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct inondations en espagne : le bilan s’alourdit à 205 morts. Read more about trumр demands cbs be ѕtrірреd оf lісеnсе оvеr еdіtеd harris іntеrvіеw. Individuals that are interested in becoming an ethical hacker should enroll in a certified beneficial course.