நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டிய கெடுபிடியால் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, ஐ.நா உள்பட சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புகள் பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாஜக எழுப்பிய கச்சத்தீவு விவகாரம்
இந்த சூழ்நிலையில் தான், கச்சத்தீவு விவகாரத்தைக் கிளப்பி உள்ளது பாஜக. கச்சத்தீவு குறித்த சில தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெற்றிருக்கிறார். அந்த தகவல்களை அவர் வெளியிட்டதைத் தொடர்ந்து, கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி திமுக-வையும் அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியையும் சாடி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.இதையடுத்து, அப்போதைய முதலமைச்சரான கருணாநிதிதான் கச்சத்தீவை தூக்கி இலங்கைக்கு கொடுத்துவிட்டார் என்பது போன்று பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
விளாசும் திமுக – காங்கிரஸ்
இதனையடுத்து இந்த விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பிரதமர் மோடியையும் பாஜக-வையும் கடுமையாக சாடி உள்ளன. தன்னுடைய பத்து ஆண்டுகால ஆட்சியில் செய்ததைச் சொல்ல முடியாத பாஜக, தேர்தல் பயம் காரணமாக கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது என்று அக்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்கள்” என பாஜக-வைச் சாடியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கச்சத்தீவை மீட்க வேண்டுமென்றால் போருக்குத்தான் செல்ல வேண்டும் என்று உங்கள் (மோடி அரசின்) அரசுத் தலைமை வழகக்றிஞர் முகுல் ரோத்தகி, 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ‘கச்சத்தீவை மீட்க நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
சீனா குறித்து மவுனம் ஏன்?
அதேபோன்று அக்கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம், “1974 ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ‘எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை’ என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம், ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு” என்று பதிவிட்டுள்ளார்.
கருணாநிதி தெரிவித்த எதிர்ப்பு… விளக்கும் திமுக
இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் அப்போது நடந்தது என்ன என்பதை விளக்கும் திமுக-வினர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்த எதிர்ப்பை விரிவாக விளக்குகின்றனர்.
“கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை 1920களிலேயே துவங்கிவிட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டது. இருந்தபோதும் இந்திய அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 1967ல் திமுக பெரும் எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பியது. இதற்குப் பிறகு பெரிய அளவில் இந்த விவகாரம் அவையில் எழுப்பப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில், இந்த விவகாரத்தைக் கண்டுகொள்வதில்லை என்ற போக்கையே கடைபிடித்தது மத்திய அரசு.
ராமநாதபுரம் ஜமீனின் ஆவணங்களைக் காட்டி திமுக. அரசு கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்று கூறினாலும் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. ஒருகட்டத்தில், அந்தத் தீவின் மீதான வரலாற்று உரிமை இந்தியாவிடம் இருந்ததா என ஆராயும்படி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்தார். ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்தனர். 1973 வாக்கில் கச்சத்தீவு மீதான உரிமையை இந்தியா விட்டுவிட முடிவுசெய்ததுபோலத் தெரிந்தது.
இதையடுத்து, தனது சட்ட அமைச்சரான செ. மாதவனுடன் இந்திரா காந்தியைச் சந்தித்த முதலமைச்சர் கருணாநிதி, தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாகவும் பிரதமரிடம் அளித்தார் கருணாநிதி.
மாநில அரசு சேகரித்த ஆதாரங்களின்படி, ‘கச்சத்தீவின் மீது இலங்கை அரசானது ஒருபோதும் இறையாண்மை செலுத்தியதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அநாதி காலம் தொட்டே தமிழ்நாடு கடற்கரையில் முத்து, சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜா உள்ளிட்ட தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கே உரியதாக இருக்கிறது என வரலாற்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராமநாதபுரம் ராஜா இலங்கை அரசுக்கு எந்தக் காலத்திலும் வாடகையோ, ராயல்டியோ செலுத்தியதில்லை’ என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை தற்போது சுட்டிக்காட்டுகின்றனர்.