Amazing Tamilnadu – Tamil News Updates

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்… தமிழகத்துக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?

“ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையும் அமைக்கப்படும்” என சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, தொழில்துறையினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

2033 ஆண்டுக்குள் இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுமார் 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக அது அமையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிறைவேறிய நீண்ட நாள் கோரிக்கை

இப்படி ஒரு விமான நிலையம் வேண்டும் என்பது ஓசூர் சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தினரின் (Hosur Small and Tiny Industries Association – Hostia) நீண்ட நாள் கோரிக்கையாகும். பல்வேறு காரணங்களால், இந்த கோரிக்கை நிறைவேறுவது தடைபட்டு வந்தது. தற்போது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது, அதன் சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரி மற்றும் அருகில் உள்ள தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு மட்டுமல்லாது, அருகிலுள்ள பெங்களூரின் தென்கிழக்கு பகுதிகளுக்கும் பயனளிக்கும். இதனால், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்றுமதி/இறக்குமதி தொழில்கள் ஊக்கம் பெறும்

பெங்களூருக்கு வெளியே தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைய இருக்கும் இந்த புதிய விமான நிலையம், இன்ஃபோசிஸ் மற்றும் பயோகான் போன்ற நிறுவனங்களின் அலுவலகங்களையும், சந்தாபுரா மற்றும் அத்திபெலே போன்ற அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியான பெங்களூருக்கும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓசூர் சாலை மற்றும் பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு வழிப்பாதையில், ரியல் எஸ்டேட் தொழில் ஊக்கம் பெறவும் இது வழிவகுக்கும் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.

இதனால், ஒசூர் தொழில்துறையினருக்கு வரும் நாட்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பல பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், ஒசூரை நோக்கி வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இங்கு தயாராகும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். அத்துடன் மலர்கள், கிரானைட் தொழில், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களும் விரிவடையும் எனக் கூறுகிறார் ஓசூர் சிறு மற்றும் குறு தொழில் சங்கத் தலைவரான மூர்த்தி.

இரட்டை பயன்கள்

“ஓசூர் விமான நிலையம், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக அமைவதோடு, கர்நாடகா செலவில் தமிழகத்திற்கு அதிக முதலீடு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஓசூர் அருகிலேயே பெங்களூருவும் இருப்பதால், ஓசூர் புதிய விமான நிலையம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டிலும் வளர்ச்சியைத் தூண்டும்” என்று கூறுகிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா.

தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கும் ஓசூர் தொழில் சங்கத் தலைவர் ராஜகோபாலன், “தற்போது, ​​ஓசூரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும், அதற்கு பணமும் அதிக செலவாகும். இதனாலேயே, நாங்கள் ஓசூருக்கு ஒரு விமான நிலையம் வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக கோரி வந்தோம். தற்போது ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், அது பெங்களூரு உடனான இணைப்பை மேம்படுத்தி, உற்பத்தித்திறன் மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கச் செய்யும்” என்கிறார்.

சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற முக்கிய வணிக மையங்கள் மற்றும் தொழில்துறை மையங்களுக்கு அருகில் ஓசூர் உள்ளது. இப்பகுதி ஆட்டோ மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழில், சரக்குப் போக்குவரத்து தொழில் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் துறை ஆகியவற்றின் மையமாக உருவெடுத்து வளர்ந்து வருகிறது. டாடா எலெக்ட்ரானிக்ஸ், டிவிஎஸ், அசோக் லேலண்ட், டைட்டன் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (IAMPL) போன்ற பிரபல நிறுவனங்கள், திட்டமிடப்பட்ட ஐடி பூங்காவுடன் கூடிய ஐடி ஹப் ( IT hub)-ஐ இப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளன என்பதால், புதிய விமான நிலையம் பல வகையில் பயனளிப்பதாக இருக்கும்.

பொம்மசந்திரா-ஓசூர் மெட்ரோ ரயில்

இதனிடையே, பெங்களூரு மெட்ரோ ரயிலை ஓசூர் வரை நீட்டிக்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், பொம்மசந்திரா மற்றும் RV சாலையை இணைக்கும் பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் பாதை திட்டம், இந்த ஆண்டு டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொம்மசந்திரா-ஓசூர் மெட்ரோ வழித்தடத்தின் தூரம் 20.5 கி.மீட்டராக உள்ள நிலையில், அது கர்நாடகாவில் 11.7 கி.மீட்டரும் தமிழகத்தில் மீதமுள்ள 8.8 கி.மீட்டருமாக அமையும். எனவே, இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கிவிட்டால், அது ஓசூர் தொழில்துறை வளர்ச்சிக்கு இன்னும் கூடுதல் உத்வேகமாக அமையும்.

மொத்தத்தில் ஓசூருக்கு மட்டுமல்லாது, தமிழகத்தின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் சேர்த்தே முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது எனலாம்.

Exit mobile version