ஏரிகள் நிரம்பினாலும் சென்னையில் இனி திடீர் வெள்ள அச்சம் இல்லை… ஏன்?
மிக்ஜாம் புயல் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில், சென்னையை சுற்றியுள்ள ஏரிகளிலிருந்து உபரி நீரை முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு வெளியேற்றி வந்ததன் காரணமாக, புயலால் ஏற்பட்ட பெருமழையிலும் சென்னை நகரம் இன்னொரு 2015 ஆம் ஆண்டை சந்திக்காமல் தப்பித்தது தெரியவந்துள்ளது.
புயலும் கனமழையும் சென்னைக்கு புதிதல்ல என்றாலும், அதனை எதிர்கொள்ளவும் மக்களைப் பாதுகாக்கவும் அரசு எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை பொறுத்தே நிலைமை விபரீதமாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
அந்த வகையில் பார்த்தால், 2015-ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திட்டமிடப்படாமல், 1 லட்சம் கன அடி அளவிற்கு பெருமளவு நீர் திடீரென திறந்து விடப்பட்டது. மழைக்கு முன்னதாகவே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்புகொண்டு பேச முடியாத நிலை இருந்ததால், கடைசி வரை அதிகாரிகள் முடிவெடுக்க முடியாமல் தவித்து நிலைமை கைமீறிச் சென்றது. 2015 ல் சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
2015 கற்றுத்தந்த பாடம்
இந்த நிலைமையில், 2015 கற்றுத்தந்த பாடம் மற்றும் மிக்ஜாம் புயல் மழைக்கு முன்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவ்வப்போது நடத்திய கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் காரணமாக நீர் நிலைகளைக் கண்காணிப்பதில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.
செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து நீர் திறப்பை படிப்படியாக குறைக்கும் பணியை நீர்வளத் துறை கடந்த வாரம் புதன்கிழமை அன்றே தொடங்கியது. செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் டிசம்பர் 4-ஆம் தேதியன்று திறக்கப்பட்ட நீர்வரத்து, அப்பகுதியில் மழை குறைந்ததால் 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
நீர்த்தேக்க மேலாண்மையில் புதிய அணுகுமுறை
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பல்வேறு அரசு அதிகாரிகளுடன் நீர்த்தேக்கங்களின் நிலைமை குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், அதில் தேக்கி வைக்கும் நீரின் அதிகபட்ச அளவு 3,459 மில்லியன் கன அடி என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது.
இந்த பருவமழையின்போது ஏரியின் நீர்த்தேக்க மேலாண்மை விஷயத்தில் அதன் பழமைவாத அணுகுமுறைக்குப் பதிலாக புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக ஒரு சிறிய அளவிலான நீர் சேமிப்பகத்தை முன்கூட்டியே காலி செய்யும் முறையை தாங்கள் பின்பற்றியதாக கூறுகிறார்கள் நீர்வளத்துறை அதிகாரிகள்.
இந்த ஆண்டு, மிக்ஜாம் புயல் மழைக்கு முன்னதாகவே செம்பரம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஏரிகளில் இருந்து குறைந்தபட்ச சேமிப்பு அளவு தீர்ந்துவிட்டது. ஒவ்வொரு நீர்த்தேக்கத்திலும் குறைந்தபட்சம் மூன்று அடி இடைவெளி பராமரிக்கப்பட்டு சென்னை நகர குடிநீர் தேவைக்கான சேமிப்பு இடம் உருவாக்கப்படுகிறது.
அடையாற்றில் வெள்ளம் வந்தாலும்...
“உதாரணமாக, ஆரம்ப மழையின் போது ஏரிக்கு வந்த தண்ணீரை விட கூடுதல் தண்ணீரை செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேற்றினோம். வரத்து அதிகமாக இருந்தபோது, கூடுதல் சேமிப்பு இடத்துடன் செம்பரம்பாக்கத்திலிருந்து நீர் வெளியேற்றத்தை குறைத்து, அதிக தண்ணீரை சேமித்து வைக்க முடிந்தது. ஆதனூர் போன்ற மேல்நிலைப் பகுதிகளில் இருந்து 10 மணி நேரம் பெருமழை பெய்து கொண்டிருந்தபோது வந்த நீர்தான் அடையாறு ஆற்றில் ஓடியது. செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை நிர்வகிக்கும் இந்த சமநிலை நடவடிக்கைகளால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், அதன் அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது தவிர்க்கப்பட்டது” என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளம் ஆற்றில் வடிந்தோடுவதற்கு உதவியது. கொசஸ்தலையாற்றின் குறுக்கே உள்ள பூண்டி நீர்த்தேக்கத்திலும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2015 ஆம் ஆண்டைப் போல் அல்லாமல், தற்போது வெள்ள வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஏரிகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. மழை பெய்த நாட்களில் நீர்த்தேக்கங்களின் சேமிப்பு 75% ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது நீரின் சேமிப்பு கிட்டத்தட்ட 94 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் மேலும் கூறுகின்றனர்.
இனி அடுத்ததாக பெருமழை குறித்த முன்னறிவிப்பு வந்தால், அதற்கேற்ப ஏரிகளின் நீர் இருப்பு பராமரிக்கப்படும். எனவே திடீர் வெள்ளம் குறித்த அச்சம் இனி சென்னைக்கு இல்லை எனலாம்!