Amazing Tamilnadu – Tamil News Updates

வாட்டி வதைக்கும் வெயில்… 3 மாதங்களுக்கு அதிகரிக்கப்போகும் வெப்பம்… கோடை மழை பெய்யுமா?

மிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்திலிருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே 10 மாவட்டங்களில் 100 டிகிரியை எட்டும் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது.

எல் நினோ-வால் எகிறும் வெயில்

இந்த நிலையில், வெயில் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எல் நினோ மாற்றம் காரணமாக இந்தியாவில் வெயில், கடந்த ஆண்டுகளை விட அதிகரிக்கும் என அந்த மையம் தெரிவித்துள்ளது.

‘எல் நினோ ‘ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பை குறிக்கும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் கால நிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதன் அளவு 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் சூப்பர் எல் நினோ ‘ என்று அழைக்கப்படும்.

எல் நினோ

3 மாதங்களுக்கு வறட்சி

இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையே சூப்பர் எல் நினோ ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. பொதுவாக எல் நினோ தாக்கம் ஏற்படும்போது வறட்சி ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். எனவே இன்னும் 3 மாதங்களுக்கு, அதாவது ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கமும் வெப்பமும் கடுமையாக இருக்கும் என்றும், அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமிழ்நாட்டில் வரவிருக்கிற நாட்களில் கடுமையான வறட்சி நிலவும்.

தேர்தலில் பாதிப்பு ஏற்படுமா?

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் வெயில் ஒருபக்கம் வாட்டி வதைப்பதால் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் களைப்பும் சோர்வும் ஏற்படுகின்றன. ஒரு சில இடங்களில் முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் சிலர், தேர்தல் பிரசாரத்தின்போது கடும் வெயில் காரணமாக மயக்கமடைந்து விழுந்ததாகவும் செய்திகள் வெளியாயின.

இது ஒருபுறம் இருக்க, ஓட்டுப் பதிவு நாளன்று கடும் வெயில் வாட்டி வதைத்தால், வாக்காளர்கள் வீட்டை விட்டு வெளியே வர யோசிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், அதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறையக்கூடும். இருப்பினும், வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக வாக்குச் சாவடி மையங்கள் அருகே சாமியானா பந்தல், குடி தண்ணீர் வசதி போன்றவற்றை அமைத்துக்கொடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை மழை குளிர்விக்குமா?

இந்த நிலையில், இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவில்லை. அது தொடங்கிவிட்டால் வெயிலின் உக்கிரம் இன்னும் அதிகமாக இருக்கும். அது தணிய வேண்டுமெனில், கோடை மழை பெய்தால்தான் உண்டு. ஆனால், அப்படி கோடை மழை பெய்யும் என்பதற்கு எவ்வித அறிகுறியோ அல்லது உத்தரவாதமோ தற்போதைக்கு தென்படவில்லை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய சில இடங்களில், வரும் வாரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதனால் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த பகுதி மக்கள் ஓரளவுக்கு நிம்மதி அடையலாம்.

Exit mobile version