எலெக்ட்ரானிக் துறையில் தமிழ்நாட்டின் அடுத்த பாய்ச்சல்!
சென்னையில், வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் செமிகண்டக்டர் பாலிசி ஒன்று வெளியிடப்பட உள்ளது. எலெக்ட்ரானிக் துறையில் அடுத்த மைல் கல்லைத் தொட செமிகண்டக்டர்கள் உற்பத்தியை தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த பாலிசி வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்கனவே எலெக்ட்ரானிக் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் மட்டும் 5.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள், தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி உள்ளன. இந்த வருடம், அதை 8 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய இறக்குமதி – ஏற்றுமதி தொடர்பான வர்த்தக ஆய்வு அறிக்கையானது, ‘சென்ற நிதியாண்டு ஏப்ரல் 2023 முதல் நவம்பர் மாதம் வரையில், தமிழ்நாட்டின் எலெக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 5,59 பில்லியன் டாலர்’ எனத் தெரிவிக்கிறது. அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான எலெக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு 17.74 பில்லியன் டாலர்கள் ஆகும். அதன்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 31.51 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இப்படி ஏற்கனவே எலெக்ட்ரானிக் துறையில் சாதனை படைத்து வரும் தமிழ்நாடு, அடுத்த கட்டமாக செமிகண்டக்டர் உற்பத்தியிலும் சாதனை படைக்க ஏதுவாக, மாநில அரசு புதிய கொள்கை ஒன்றை உருவாக்க இருக்கிறது.
அதுபற்றிப் பார்ப்பதற்கு முன் செமிகண்டக்டர்கள் எனும் குறை கடத்திகள் என்றால் என்ன? அவை என்ன செய்யும்? அவற்றின் பலன்கள் என்ன… என்பதை முதலில் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
கண்ணாடி, உலோகம் போன்றவை எளிதாக மின்சாரத்தைக் கடத்தக் கூடியவை. ரப்பர் போன்ற பொருட்கள் அரிதில் கடத்திகள். இவை இரண்டுக்கும் இடையே மின்சாரத்தைக் கடத்தும் பொருட்கள் செமிகண்டக்டர் அல்லது குறைகடத்திகள் எனப்படுகின்றன.
சிலிக்கான் அத்தகைய ஒரு உலோகம். தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களிலும் சிலிக்கான்தான் பெரிதும் பயன்படுகிறது. அதாவது செமிகண்டக்டர். கார்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், மொபைல்கள் என நம்மை சுற்றியுள்ள எல்லா சாதனங்களும் செமி கண்டக்டர்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது என்ற நிலையில் இருக்கிறது.
அப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த செமிகண்டக்டர் தயாரிப்புக்கு பெரிய அளவில் எதிர்காலம் உள்ளது. சுருக்கமாக சொன்னால், எந்த நாடு இப்போதே செமி கண்டக்டர் உற்பத்திக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்கிறதோ, எதிர்காலத்தில் அவை அசைக்க முடியாத உலக சக்தியாக மாறும் என்று கூறுகிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு, ‘செமிகண்டக்ட்டர் அண்ட் அட்வான்ஸ்டு எலெக்ட்ரானிக் பாலிசி’ என்ற பெயரில், வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கொள்கை ஒன்றை வெளியிட இருக்கிறது.
அந்தக் கொள்கையின் படி, செமிகண்டக்டர்கள் உற்பத்தியைத் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நோக்கத்தில் புதிய முதலீட்டாளர்களை இந்தத் துறையில் ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
இது குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், “செமி கண்டக்டர்கள் உற்பத்தி தமிழ்நாட்டில் அதிக அளவில் நடைபெற வேண்டுமெனில், அந்தத் தொழில் நுட்பத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படும். அதற்கு ஏற்றார்போன்ற பொறியாளர்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இருக்கிறோம். நம்மிடம் ஆய்வு மற்றம் மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளும் சிறப்பாக உள்ளன. நான் முதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களை இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உருவாக்க முடியும்” என்றார்.