‘எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி’- ‘மாற்றத்தின் விதை’யாகும் பெயர் மாற்றம்!
தஞ்சாவூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், “ இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு சுவாமிநாதனுக்கான தமிழ்நாட்டு அரசு அளிக்கும் கெளரவம் மட்டுமல்லாது, வேளாண்மை மற்றும் வேளாண் ஆராய்ச்சி மீதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், இந்திய மக்களின் பட்டினிச் சாவைத் தடுப்பதற்கும் 1960-களில் பசுமைப் புரட்சித் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் மறைந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன். வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி உலகளவில் புகழ் பெற்றதால்தான் பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்பட்டார் எம்.எஸ். சுவாமிநாதன்.
கடந்த மாதம் 28-ம் தேதியன்று அவர் மறைந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று எம்.எஸ். சுவாமிநாதனின் மேற்கூறிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ பத்மவிபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது நினைவைப் போற்றுகிற வண்ணம், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என அழைக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம், தமிழ்நாட்டின் எதிர்கால வேளாண்மை வளமாகவும் நிலையான வளர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தி உள்ளதோடு, வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியில் மேலும் பல முன்னேற்றங்களை எட்டுவதற்கான களத்தையும் அமைத்துக்கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!
அதுமட்டுமல்லாது, நம் வயல்களில் மிகுதியான விதைகளை விதைக்க வைத்த ஒரு விஞ்ஞானியை அங்கீகரித்து, ‘நன்றியுணர்வு’ என்ற விதையையும் விதைத்துள்ளார் முதலமைச்சர். ‘அர்ப்பணிப்பு உணர்வுடன் விதைக்கப்படும் சிறிய விதை கூட மாற்றத்தின் காடாக வளரும்’ என்பதை வருங்கால விவசாயிகளும் வேளாண் விஞ்ஞானிகளும் நிச்சயம் உணர்ந்துகொள்வார்கள்!