என். சங்கரய்யா: விடுதலையைத் தேடிய போராளி!

து 1931 ஆம் ஆண்டு… நாட்டின் விடுதலைக்காக துடிப்புடன் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்ட சுதந்திர போராளியான பகத் சிங் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்களும் கண்டன ஊர்வலங்களும் நடைபெற்றன. தூத்துக்குடியிலும் அதேபோன்றதொரு கண்டன ஊர்வலம் நடந்தது.

அந்த ஊர்வலத்தில் ஒன்பது வயதே ஆன சிறுவன் ஒருவனும் கலந்துகொண்டு, எல்லோரையும் போல மிக ஆவேசமாக முழக்கமிட்டான். அந்த நிகழ்வுதான் அந்த சிறுவனின் மனதில் கனலாக எரிந்து, நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நோக்கி அவனை தள்ளியது. ஆம், அந்த சிறுவன்தான் பின்னாளில் இடதுசாரி இயக்கத்தின் மூத்தத் தலைவராக உருவெடுத்த தகைசால் தமிழரான தோழர் என். சங்கரய்யா.

உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா, சிகிச்சை பலனின்றி இன்று 102 ஆவது வயதில் காலமானார்.

மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்தவர் என்.சங்கரய்யா. கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஆரம்பித்த ஆரம்பகால தலைவர்களில் தமிழகத்தின் முதுபெரும் தலைவரான சங்கரய்யா, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர். பள்ளி படிப்பை முடித்த பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

வேலையா… விடுதலையா..?

” மாணவர் தலைவராக இருந்தபோது ஆங்கிலேய அரசு என்னைப் பலமுறை கைது செய்துள்ளது. 1941 ஆம் ஆண்டில் பிப்ரவரி 28 ஆம் தேதி, பி.ஏ இறுதித்தேர்வு நடப்பதற்கு 20 நாள்களுக்கு முன்பு நான் கைது செய்யப்பட்டேன். ‘படிப்பா… நாட்டு விடுதலையா?’ என்று வந்தபோது, ‘நாங்கள் வேலை தேடுபவர்கள் அல்ல; விடுதலையை தேடுபவர்கள்’என்பதே எங்களுடைய முழக்கமாக இருந்தது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் எனது பி.ஏ தேர்வைக் கடைசிவரை எழுதவில்லை. அந்த வருத்தமும் மனதில் இல்லை. நாட்டின் விடுதலைக்காகப் போராடுவதே முதல் கடமையாக இருந்தது. இந்திய சுதந்திரத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்றதில் எனக்கு பெருமையாக இருந்தது. என்னுடைய மூளைக்குள் இருந்த ஒரே எண்ணம் அதுவாகத்தான் இருந்தது” என முன்னர் தான் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் சங்கரய்யா.

மதுரை அமெரிக்கன் கல்லூரி

தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை மறுத்தவர்

தமிழக அரசியல் களத்தில் பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து அரசியல் தலைவர்களுடன் பங்காற்றியவர்.

மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறையும், மதுரை மேற்கு தொகுதியில் ஒரு முறையும் என 1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யா மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற பிரச்னைகளுக்கு சட்டசபை பேச்சின் மூலம் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தவர் தோழர் சங்கரய்யா. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் அதாவது (ரேஷன் கடைகள்) உருவாக முதல் குரல் கொடுத்தவர் தோழர் சங்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது.

தன் அரசியல் பொதுவாழ்வில் ஏராளமான சாதிமறுப்பு மற்றும் சீர்த்திருத்த திருமணங்களை நடத்தி வைத்த பெருமைக்குரியவர் சங்கரய்யா. அதேபோல் தானும் சாதி மறுப்பு திருமணம் செய்ததோடு தனது வாரிசுகளுக்கும் சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்து சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர்.இறுதிக் காலங்களில் தனது 93 வயதிலும் ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடியவர்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்னும் பின்னும் என சிறை வாழ்க்கை அனுபவித்தவர். ஆனாலும், தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை அவர் பெறவில்லை. ‘சுதந்திரத்துக்காக சிறைக்குப் போனதே பரிசுதான்’ என்று சொல்லி பிரதிபலன் எதிர்பாராத சமூகப் பணியை ஆற்றியவர்.

இருப்பினும் பொதுவாழ்க்கையில் போராட்டத்திற்கும் சிறைக்கும் அஞ்சாமல் சேவையாற்றிய அவரின் தொண்டைப் போற்றும் வகையில், திமுக தலைமையிலான தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது கொடுத்து கவுரவித்திருந்தது. விருதுடன் சேர்த்து தமிழ்நாடு அரசு கொடுத்த ரூ.10 லட்சத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்து, கடைசி வரை தோழராகவே வாழ்ந்து மறைந்தவர் சங்கரய்யா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Overseas domestic helper insurance scheme, hk$710 for 1 year policy period, hk$1,280 for 2 year policy period. A aneel é a agência nacional de energia elétrica, responsável por regular e fiscalizar o setor elétrico brasileiro. Ross & kühne gmbh.