சென்னையில் நடைபெறும் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளை, சிறப்பு ஏற்பாடுகளின் பேரில் தமிழகம் முழுவதும் சுமார் 41.5 லட்சம் மாணவர்கள் பார்வையிட்டு பயனடைந்துள்ளனர். இந்திய அளவில் முதல் முறையாக தமிழக மாணவ – மாணவியர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது பல மட்டங்களிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்குக்கான பொருளாதார செயல் திட்ட அறிக்கையும், குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கையும் வெளியிடப்பட்டன.
மேலும், நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த மாநாட்டின் நோக்கம் குறித்து, இதில் பங்கேற்ற பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், ‘தமிழகத்தை வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள்ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும்’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கை நிறைவேற்ற தங்களது நிறுவனங்கள் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதியையும் அவர்கள் அளித்தனர்.
சிறப்பு ஏற்பாடுகள்
அத்துடன் மாநாட்டில், எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன, தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் அந்த முதலீட்டை அடிப்படையாக வைத்து தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன, இவற்றினால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதுபோன்ற விவரங்களும் தெரியவந்தன.
இதுபோன்ற விவரங்கள், மாநாட்டில் நேரடியாக பங்கேற்பவர்களுக்கு மட்டுமே உடனடியாக தெரியவரும். அல்லது ஊடகங்கள் வாயிலாக நேரலை மூலமாகவோ அல்லது மறுதினம் பத்திரிகை மூலமாகவோ மட்டுமே தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலையில், இந்த சிறப்பான நிகழ்ச்சியை தமிழக மாணவ, மாணவியர்களும் கண்டு பயனடைய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அவரது உத்தரவுப்படி, இந்த மாநாட்டு நிகழ்ச்சியை, தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் 40 லட்சம் மாணவ – மாணவியர்கள் மொபைல் போன் மூலம் இணையம் வழியாக பார்வையிட சிறப்பு வசதி செய்யப்பட்டது.
நேரலையில் பார்த்த 41.5 லட்சம் மாணவர்கள்
மேலும், சுமார் 1.60 லட்சம் எண்ணிக்கையிலான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள், இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வுகளையும் தொழில் வாய்ப்புகளையும், தங்களது கல்லூரியிலிருந்து எல்.இ.டி. திரை மூலமாக நேரடி ஒளிபரப்பில் பார்வையிட்டனர். இதன் மூலம், சுமார் 41.5 லட்சம் தமிழக மாணவ – மாணவியர் மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு பயனடைந்தனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, மாநாட்டு வளாகத்தில் பிரமாண்டமான தொழில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பல்வேறு நிறுவனங்களின் நவீன கண்டுபிடிப்புகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக சொல்வதனால், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வீல் சேரை, வெளியிடங்களுக்குச் செல்லும் வகையில் சில விநாடிகளில் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி பயன்படுத்தும் வகையில், நவீன வீல் சேரை ஒரு நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இதுபோன்ற பல நிறுவனங்களின் நவீன கண்டுபிடிப்புகளும் இடம்பெற்றிருந்தன. இவற்றையும் மாணவ, மாணவியர்கள் நேரடி ஒளிபரப்பில் கண்டு வியப்படைந்தனர்.