மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, சென்னையில் வருகிற 7, 8 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், இம்மாநாட்டின் மூலம் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் உச்சமாக, தமிழகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.
சிங்கப்பூர், ஜப்பான் பயணம்
அந்த இலக்கை எட்டும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அம்சமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தொழில்துறை நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தான், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜவுளி, காலணி தொழில்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம், வேளாண்மை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடத்தப்பட உள்ளன. பெருந்தொழில்களுக்கு மட்டுமல்லாமல், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றிற்கும் தனி அமர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன. தொழில்துறை, ஆட்டோமொபைல், எரிசக்தித்துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க முடியும் என தமிழக அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ‘தொழில் வழிகாட்டி மையம்’ மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சுகாதாரம், வீட்டு வசதித்துறை, கைத்தறித்துறை, சுற்றுலா துறைகளிலும் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. எரிசக்தித்துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்து அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.
இந்த நிலையில், மாநாடு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதுகுறித்த ஆர்வம் மென்மேலும் பெருகி வருகிறது. 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான செயல் திட்டத்தை உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிட தமிழகம் மும்முரமாகிறது. தமிழகத்தின் துடிப்பு மிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரமாண்டமான மாநாட்டில் ஜனவரி 7, 8 தேதிகளில் இணைந்திடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.