உலகக் கோப்பையினால் அதிகரிக்கப்போகும் இந்தியப் பொருளாதாரம்!
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று தொடங்கியுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் பொருளாதாரத்தை சுமார் 19,982 கோடி ரூபாய் ( 200 பில்லியன் டாலர்) வரை உயர்த்தக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ள இந்தப் போட்டியைக் காண, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளின் மூலம், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைகள் மிகுந்த பலனளாடையும் என பாங்க் ஆஃப் பரோடாவின் பொருளாதார நிபுணர்களான ஜாஹ்னவி பிரபாகர் மற்றும் அதிதி குப்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
“2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படும் இந்த உலகக் கோப்பை போட்டி , செப்டம்பரில் தொடங்கிய மூன்று மாத பண்டிகை காலத்தையொட்டி நடைபெறுவது சில்லறை விற்பனைத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2019 -ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள் ( streaming platforms ) உட்பட பல்வேறு வகைகளில் சுமார் 56 கோடி பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிலையில், இந்த முறை அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டிவி உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் வருவாய் சுமார் ரூ.10,500 கோடி முதல் ரூ. 12,000 கோடி வரை ஈட்ட முடியும்.
இருப்பினும், இந்த உலகக் கோப்பை போட்டி பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யவும் வாய்ப்புள்ளது. தற்போது விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் வாடகைகள் அதிகரித்துள்ளன. மேலும் போட்டி நடைபெற உள்ள நகரங்களில், முறைசாரா துறையில் சேவை கட்டணங்கள் பண்டிகை கால தாக்கத்தை விட கணிசமான அதிகரிப்பைக் காட்டக்கூடும். ஒட்டுமொத்தமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பணவீக்கம் 0.15 சதவீதம் முதல் 0.25 சதவீதம் வரை உயரக்கூடும்” என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.