Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாடு நிச்சயம் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக உருவெடுக்கும்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டினார். இது தவிர பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஏராளமான விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் வழங்கி உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நீச்சல் வீரர் சகோதரர் தனுஷ் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் 5 முறை இந்தியாவிற்காக பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றவர் சகோதரர் தனுஷ். நேபாளத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டில் இரண்டு வெள்ளி பதக்கங்கள், உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 9 ஆவது ஆசிய Age Group Aquatic Championship ஒரு வெள்ளி பதக்கம் வென்றவர்.

2009 முதல் தமிழ்நாடு சார்பாக பல்வேறு Sub Junior, Junior, Senior Swimming சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு இதுவரை 101 பதக்கங்கள் வென்றுள்ளார் சகோதரர் தனுஷ். மொத்தமாக 402 பதக்கங்களை குவித்துள்ளார். 22 விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 9 முறை தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். சகோதரர் தனுஷ் மாதிரியான வீரர்களால் தமிழ்நாடு நிச்சயம் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக உருவெடுக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த வீல்சேர் பென்சிங் வீராங்கனை தங்கை சங்கீதா இங்கு வந்து உள்ளார். ஒடிசாவில் நடந்த நேஷனல் வீல்சேர் பென்சிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றவர் தங்கை சங்கீதா அவர்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற நேஷனல் வீல்சேர் பென்சிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றவர் தங்கை சங்கீதா. அவருக்கு 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் வணிக வரித் துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தில் அரசு வேலைக்கு சென்ற முதல் பெண்மணி தங்கை சங்கீதாதான். அவருடைய வெற்றிப் பயணம் கண்டிப்பாகத் தொடர வேண்டும். அதற்கு முதலமைச்சர் துணை நிற்பார். நம்முடைய அரசும், விளையாட்டுத் துறையும் என்றும் துணை நிற்கும்.

இன்றைக்கு இவர்கள் இருவரையும் மேடையில் அறிமுகபடுத்தி இருக்கிறோம் என்றால், இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் அவர்கள் தான் முன்னுதாரணமாக உள்ளார்கள்.

நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறை எடுத்து வருகின்ற முயற்சிகளை பாராட்டி CII (Confederation of Indian Industries) என்ற அமைப்பு நம்முடைய தமிழ்நாட்டிற்கு நம்முடைய துறைக்கு Best State for Promoting Sports என்ற விருதை வழங்கியது. ‘தி இந்து ஸ்போட்ஸ் ஸ்டார்’ என்கிற பத்திரிகை மிகவும் பிரபலமான பத்திரிகை Best State for Promotion of Sports என்ற விருதை நம்முடைய அரசுக்கு வழங்கியுள்ளது.

கடந்த வாரம் கிட்டத்தட்ட 650 வீரர்களுக்கு ரூ 16 கோடியே 24 லட்சம் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கி இருக்கின்றோம். தொடர்ந்து தமிழ்நாட்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய கோப்பை ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள், ஸ்குவாஷ் உலகப் கோப்பை, வோர்ல்ட் சர்ஃபிங் லீக், சைக்கிளோத்தான், சென்னை செஸ் மாஸ்டர் 2023, சென்னை செஸ் ஒலிம்பியாட், தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டி என தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம்.

விளையாட்டுத் துறை வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டும் இருப்பது அல்ல. கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும். கிராமங்களிலிருந்து நிறைய விளையாட்டு திறமையாளர்கள் வர வேண்டும் என்பதற்காக தான், இந்த ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை’ நாங்கள் தொடங்கி இருக்கின்றோம். இந்த விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி, கிராமங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறினார்.

Exit mobile version