Amazing Tamilnadu – Tamil News Updates

உடனடி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்… சென்னை ஐஐடி-யின் AI & Data Science படிப்பில் என்னென்ன சிறப்புகள்?

மிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், இன்ஜினீரியரிங் படிப்பைத் தேர்வு செய்யும் மாணவர்களின் முதல் விருப்பமாக கடந்த ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு இருந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (Artificial intelligence & Data Science) படிப்புக்கு மாணவர்களிடையே அதிக மவுசு காணப்படுகிறது.

காரணம் என்ன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை… வேலை வாய்ப்புதான். அந்த வகையில், ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து படித்து வெளியே வருபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதனால், ஐஐடி-யில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி காணப்படுகிறது.

‘வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி’

இந்த நிலையில், நாடு முழுவதும் இருக்கும் ஐஐடி-களில் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் சென்னை ஐஐடி, தற்போதைய உலக போக்குக்கு ஏற்பவும், பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தேவை அதிகரித்திருப்பதையும் கவனத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் படிப்புக்கென்றே ‘வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி’ என தனியாக தொடங்கி உள்ளது.

அந்த வகையில், வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியில் வழங்கப்படும் படிப்புகள் வருமாறு:

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் பிடெக்
தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் எம்டெக்
தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் எம்எஸ் & பிஎச்டி
தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்துடன் இணை எம்.எஸ்சி
தரவு அறிவியலில் சர்வதேச பல்துறை முதுநிலைப் பாடத்திட்டம்
தரவு அறிவியலில் பல்துறை இரட்டைப் பட்டம்

இந்த பள்ளியைத் தொடங்குவதற்கு சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும், வத்வானி தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளி தலைவரும், அமெரிக்காவின் ”ஐகேட்” கேபிடல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சுனில் வத்வானி ரூ.110 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். அவரது பெயரிலேயே இந்த பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள் ரூ. 513 கோடி நன்கொடை

சுனில் வத்வானி – ஐஐடி இயக்குனர் வி.காமகோடி

இது குறித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி, “நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.110 கோடி, சென்னை ஐஐ.டி-யின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்காக மட்டும் செலவிடப்பட உள்ளது. அதன்படி, ”பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு’ என்ற படிப்பு வரும் கல்வியாண்டில் இருந்து சென்னை ஐஐடி அறிமுகம் செய்ய இருக்கிறது. JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள், நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் 2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் 513 கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் எனவும், வரும் ஆண்டில் அதிகளவில் நிதியைப் பெறவும் முயற்சிப்பதாக காமகோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சென்னை ஐஐடிக்கு அளிக்கும் 900 கோடி ரூபாய் நிதியில் 60 சதவீதம் சம்பளம் ஒய்வூதியப் பலன்களுக்கு செலவாகிறது. மீதமுள்ள தொகையில் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிக்கு செலவிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version