Amazing Tamilnadu – Tamil News Updates

பவதாரிணியின் பாடல்… இளையராஜாவுக்கு நன்றி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

மிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கல்வித்துறைக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவிகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இலவச பஸ் பாஸ் திட்டம், அரசு வழங்கும் இலவச புத்தகங்கள் உள்ளிட்ட உதவிகளால் ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளும் கல்வி கற்க அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கல்வி கற்பதை ஊக்குவிக்கும் திட்டங்கள்

மேலும், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டம், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கணினி அறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ போன்றவற்றால், தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதில், இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாக மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து வெளியேறும் மாணவிகள் உயர்கல்வியில் சேருவதை ஊக்குவிக்கும் விதமாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தவிர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் போன்றவற்றால் உயர் கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது.

பவதாரிணி இசையில் பெண் கல்வி பாடல்

இந்த நிலையில், பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக பள்ளிக் கல்வித்துறையால் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

“பெண் என்பவள் நீருமானவள்…

பெண் என்பவள் தீயுமானவள்…”

எனத் தொடங்கும் இப்பாடலை, கவிஞர் சுகிர்தராணி எழுதியுள்ளார். இப்பாடலுக்கு இசைஞானி இளையராஜாவின் மகள் மறைந்த பாடகி பவதாரிணி இசையமைத்துள்ளார். புதிய கல்வியாண்டு தொடங்க உள்ள சூழ்நிலையில், இந்தப் பாடல் தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இசைஞானியைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

இப்பாடல் உருவாக்கத்தில் பவதாரிணியின் இசை பங்களிப்பு இருந்ததையொட்டி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று இளையராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து, பவதாரிணியின் இசை பங்களிப்புக்கான தமிழக அரசின் நன்றியை தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அன்பில் மகேஷ், “தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version