முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மகளிருக்கான இலவச பேருந்து திட்டம், பெண்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தை தற்போது வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருப்பது, ஒட்டு மொத்த இந்தியாவிலும் அடுத்தடுத்து செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை உருவாக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் வேலை, கல்வி மற்றும் வீட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக அரசுப் பேருந்துகள்தான் பெரும்பாலும் பெண்களுக்கான முதன்மை தேர்வாக இருக்கிறது. ஊரின் கடைசி எல்லை வரை செல்லும் வசதி, மாற்றுத் திறனாளிகளும் பயணிக்கும் வசதி மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணிக்க கூடுதல் கட்டணம் போன்ற காரணங்களால் 68-89 சதவீதம் பேர் அரசுப் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.
சென்னை பெண்களின்மகிழ்ச்சி
இத்தகைய சூழ்நிலையில், மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து ‘என்ன நினைக்கிறார்கள் சென்னை பெண்கள்?’ என்ற கேள்வியுடன் சென்னை முழுவதும் 3000 பேரிடம் சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது. இதில் 2432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். 100 பேர் திருநங்கைகள். இவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், 89 சதவீத பெண்கள் போக்குவரத்திற்கு அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 82 சதவீதம் பேர் அரசின் இலவச பேருந்து திட்டம் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்கள்.
இலவசப் பேருந்துத் திட்டம் பெண்களிடம், குறிப்பாக உழைக்கும் பெண்களிடம், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில், பல பணிபுரியும் பெண்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை போக்குவரத்து செலவுகளுக்கு செலவிட வேண்டியிருந்தது. இந்த நிலையில், இந்த திட்டம் அவர்களின் போக்குவரத்துக்கான செலவை இல்லாமல் ஆக்கியுள்ளது. இதனால் அவர்களின் நிதிச் சுமை நீங்கி, அவர்களால் பணத்தைச் சேமிக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
எல்லை தாண்டும் வெற்றி
தமிழ்நாட்டில் இலவசப் பேருந்து திட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியும், இந்த திட்டம் பெண்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கமும்தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களும் இதே போன்ற திட்டங்களை செயல்படுத்த தூண்டியது. டெல்லி, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளன. இந்த வெற்றி, எதிர்காலத்தில் மெல்ல மெல்ல இந்தியாவின் இதர மாநிலங்களிலும் அடுத்தடுத்து செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முக்கிய படியாக இந்த திட்டம் மாறி உள்ளது.
மேலும், இலவச பேருந்து திட்டம் என்பது இந்தியாவில் பெண்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தும் திறன் கொண்ட ஒரு முற்போக்கான மற்றும் மாற்றத்தை உருவாக்கும் கொள்கையாகும். மேலும் அனைத்துப் பெண்களுக்கும் பொதுப் போக்குவரத்தை அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும் மாற்றுவதன் மூலம், இந்தத் திட்டம் அவர்களின் கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட இலக்குகளைத் தொடரவும் அவர்களுக்கு உதவும்.
மொத்தத்தில் இலவசப் பேருந்து திட்டத்தின் வெற்றி, இந்தியாவில் பெண்கள் யாரையும் சாராமல் தங்களது சொந்த காலில் நின்று, தங்களுக்கான அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.