Amazing Tamilnadu – Tamil News Updates

இனி சிறைச் சுவர்கள் வெளியுலகின் முகம் பார்க்கும்!

ல ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் சிறைச் சுவர்கள் தனிமையின் மௌனத்துடன், வெளியுலகத்தின் பார்வைக்காகவும் அங்கு புழங்கும் மனித முகங்களின் தரிசனத்துக்காகவும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றன. கைதிகளை அவர்களது உறவினர்கள் நேரில் வந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை பார்க்கலாம் என்றாலும், குடும்பத்தில் உள்ள எல்லோரும் பார்க்கவோ அல்லது பேசவோ நடைமுறையில் இயலாது.

சிறையில் இருக்கும் எல்லா கைதிகளும் கொடிய குற்றங்களைப் புரிந்து வந்தவர்கள் அல்ல. கணிசமானோர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தவறு செய்துவிட்டு தண்டனையை அனுபவித்து வருபவர்களாக இருப்பார்கள். எவ்வாறாக இருந்தாலும், இந்த கைதிகளில் பெரும்பாலானோர் தாங்கள் செய்த தவறை எண்ணி மனம் வருந்துபவர்களாகவும், தாய்- தந்தையர், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்… என தங்களது குடும்ப உறவுகளின் முகம் பார்த்து பேச முடியவில்லையே என்ற தவிப்புடனும் மன அழுத்தத்துடனுமே சிறையில் நாட்களைக் கடத்தி வருவார்கள்.

அவர்களது இந்த மன அழுத்தத்தை குறைக்கவும், தங்களுடைய தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் வகையிலும் அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள், வழக்குரைஞர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசும் முறை இருந்துவருகிறது. அது வாரத்திற்கு 14 நிமிடங்கள் பேசலாம் என்று அளவுக்கு அனுமதி உள்ள போதிலும், முகம் பார்த்து பேச முடியாத தவிப்பு அவர்களிடையே இருக்கத்தான் செய்தது.

சிறை உறவுகளை இணைக்கும் வீடியோ கால் வசதி

இந்த நிலையில் தான், கைதிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தொலைபேசியில் பேசும் காலவரம்பை வாரத்திற்கு 14 நிமிடங்கள் என்பதிலிருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை என்றும், ஒரு முறைக்கு 12 நிமிடங்கள் பேசலாம் என்றும் உயர்த்தி அறிவித்துள்ள தமிழக அரசு, ஆடியோ மூலம் மட்டுமல்லாது வீடியோ காலிலும் பேசிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கைதிகள் தங்களது உறவுகளை முகம் பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நவீன தொழில்நுட்பம் கொடுத்த வசதியும் கைதிகளின் மீதான அரசின் இரக்கமும் சேர்ந்து கைதிகளின் வாழ்க்கையையே மாற்றும் நிலையை உருவாக்கி உள்ளது. மொபைல் போன் திரையில் தன் மகன் சிரிப்பதைக் காணும் ஒரு தாயின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியையோ அல்லது ‘நான் விரைவில் வீடு திரும்புவேன்’ என்று சொல்வதைக் கேட்கும் ஒரு தந்தை அல்லது தாய் அல்லது சகோதரன் அல்லது சகோதரியின் மனம் குதூகலிப்பதையோ மனக் கண்ணில் கற்பனை செய்து பாருங்கள்… சிறைக்குள்ளும் அல்லது சிறைக்கு அப்பாலும் இருப்பவர்களிடையேயான அன்பையும் ஆழமான நேசிப்பையும் அதில் உணர முடியும்.

இனி கல்லுக்குள் ஈரம் கசியும்

இந்த வீடியோ கால் வசதி சம்பந்தப்பட்ட கைதிகளின் குடும்பங்களையும் தாண்டி சமூக அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்லாது கைதிகளிடையே வாழ்க்கை மீதான ஒரு புது நம்பிக்கையையும் உறவுகள் மீதான பிரியத்தையும் அதிகரிக்கச் செய்யும். சிறை வாழ்க்கையின் வலிகளையும் வேதனையையும் யாரிடமும் பகிராமல் கல்லாய் இறுக்கமடைந்த அந்த உள்ளத்தில் இனி அன்பு, நேசம், பாசம் என்ற ஈரம் கசியும். எல்லாவற்றையும் விட, சொல்லி அழவும் ஆறுதல் கூறவும் இல்லாமல் போன உறவுகளிடம் ஒரு மூச்சு தனது துயரக் கதைகளைச் சொல்லி, மனப்பாரத்தை இறக்கி வைக்க முடியும். இதுபோன்ற வீடியோ அழைப்புகள் சிறைக் கைதிகளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களிடையே நேர்மறையான சமூக நடத்தையை வளர்க்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

அந்த வகையில் தமிழக அரசின் இந்த முடிவு வெறும் கொள்கை மாற்றம் மட்டுமல்ல; இது கைதிகளின் மீதான கருணை மற்றும் புரிதலின் வெளிப்பாடு. கைதிகள் செய்த குற்றமும் அவர்களது கடந்த கால சட்டமீறல்களும் ஒருபுறம் இருந்தாலும், அவர்களும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும், உறவுகளின் பாசத்தையும் நேசத்தையும் கண்டிட அனுமதிக்க வேண்டும். அவர்கள் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் என்பதையும் அரசின் இந்த நடவடிக்கை அங்கீகரிக்கிறது.

புனர்வாழ்வு என்பது தண்டனை மட்டுமல்ல, நம்பிக்கையை வளர்ப்பதும் தனிநபர்களை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பதும் தான்!

Exit mobile version