இந்த வருஷம் AI-க்குத்தான் மவுசு!
சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழில் நுட்பத்திற்கான படிப்பின் மீது மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. காரணம், வளர்ந்து வரும் அந்தத் தொழில் நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதுதான்.
மாணவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட சென்னையில் உள்ள பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகள், இந்தப் படிப்பை இந்தக் கல்வியாண்டில் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கின்றன. வழக்கமான அடிப்படை அறிவியல் படிப்பான பிஎஸ்சி படிப்பதற்கான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகள், தங்களின் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டப்படிப்பில் ஏஐ மற்றும் டேட்டா சயின்சை இணைத்துத் தரத் திட்டமிட்டுள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 134 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. வரும் கல்வியாண்டில் 24 கல்லூரிகள் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்படுத்த இருக்கின்றன. அதில், 13 கல்லூரிகள் டேட்டா சயின்சையும் 11 கல்லூரிகள் ஏஐ படிப்பையும் இணைத்துத் தரத் திட்டமிட்டுள்ளன.
அதேபோல முதுநிலையிலும் நான்கு கல்லூரிகள் ஏஐ மற்றும் டேட்டா சைன்ஸ் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளன. கடந்த சில வருடங்களாக பிஎஸ்சி மேத்ஸ், பிசிக்ஸ் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. பொதுவாக மாணவர்கள் அடிப்படை அறிவியலைப் படிப்பதை விட, நடைமுறையில் பயன்படுத்தும் படிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு காரணம், அந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் உண்டு.
ஏற்கனவே உள்ள கல்லூரிகள் ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்தை புதிதாக இணைக்க திட்டமிட்டுள்ள நிலையில், புதிதாக மண்ணிவாக்கம், ஆவடி, புதிய பெருங்களத்தூர் மற்றும் மதுராந்தகத்தில் கல்லூரிகள் தொடங்க நான்கு அறக்கட்டளைகள், பல்கலைக்கழகத்திடம் அனுமதி கேட்டுள்ளன.