இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் இந்து திருமணங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு சமூகத்திற்குமான திருமண சடங்குகள் வேறுபடும். ஒரே வகையான திருமண சடங்குகள் என்பது கிடையாது.
இந்த நிலையில், அண்மையில் இந்து திருமணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மாசிஹ் ஆகியோரடங்கிய அமர்வு, “இந்து திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சப்தபதி’ உள்ளிட்ட திருமணச் சடங்குகளை முறையாக மேற்கொள்ளாத திருமணங்கள் இந்து திருமணங்களாக அர்த்தம் கொள்ளப்படாது” என்றும், அப்படியான திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் செல்லாது என்றும் தீர்ப்பளித்திருந்தனர்.
தமிழ்நாட்டில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித திருமண சடங்குகளுமின்றி சுயமரியாதை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றமும் சுயமரியாதை திருமணம் செல்லும் என அறிவித்திருந்தது.
‘தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல’
இத்தகைய நிலையில்தான், மேற்கூறிய உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பு குறித்து சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்த நிலையில், திராவிடர் கழகத்தலைவர் தலைவர் கி.வீரமணி, இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல என்றும், இந்த தீர்ப்பு பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்றது போல் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
“மேற்கண்ட தீர்ப்பில் பழைய இந்து மத திருமணங்கள் சம்பந்தப்பட்ட ‘ரிக்’ வேதத்தை நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டுகிறது. ‘ரிக்’ வேதத்தில் எங்காவது ‘இந்து’ என்ற சொல் உண்டா?
இந்து திருமணச் சட்டப்படி மணவிலக்குப் பெற முடியுமா?
இப்போது இந்து திருமணச் சட்டப்படி திருமணங்கள் செய்துகொள்ளும் மணமக்களுக்கும் ‘‘மணவிலக்கு’’ (Divorce) பெற சட்டம் அனுமதிக்கும் முறை, முன்பு கிடையாதே! இப்போது புரோகித சடங்குகள் நடத்தப் பெறும் ‘‘விவாஹங்கள்’’ எப்படி தலைப்பிடப்படுகின்றன? அதில் சமத்துவமோ, சம உரிமையோ உண்டா?
இவற்றையெல்லாம் தாண்டி, வாழ்க்கையில் ஈடுபடுவோர் திருமணம் என்ற சடங்கில் ஈடுபடாது – ‘Living together’ என்று வாழுவது உள்பட, உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைப்படி உள்ள சமத்துவம், அடிப்படை கடமைகள் – 51-ஏ(எச்)) பிரிவுப்படி – அறிவியல் மனப்பான்மை, கேள்வி கேட்பது, சீர்திருத்தம் செய்தல் என்பதற்கும் முற்றிலும் எதிரானது அல்லவா!
பழைய ‘ஹிந்து லாவை’ உயிர்ப்பிக்கின்ற தீர்ப்புபோல உள்ளது என்பதாலும், தமிழ்நாடு அரசின் சட்டப் பிரிவுகள் 7-ஏ சட்டத் திருத்தப்படி, சுயமரியாதைத் திருமணம் உச்சநீதிமன்றத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இது ஏற்கத்தக்கதல்ல !இதன்மீது மறுசீராய்வு மனு போடுதல் அவசியம்” என வீரமணி மேலும் தெரிவித்துள்ளார்.
‘சுயமரியாதைத் திருமணத்துக்குப் பொருந்தாது’
அதேபோன்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, “தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு, தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமண சட்டத்துக்கு கீழ் நடைபெற்ற திருமணங்களுக்குப் பொருந்தாது எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஆங்கில ஏடு ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில், “சுதந்திர இந்தியாவில் இந்து திருமண முறை சட்டம் உருவாக்கப்பட்டது. சடங்குகளும் தீயைச் சுற்றி நடப்பதும் இந்து திருமணத்துக்குக் கட்டாயமாக்கப்பட்டது.
பல திருமணங்கள் செல்லாதவை ஆகின. வழக்குகள் தொடுக்கப்பட்டன.1967 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் பதவியேற்ற பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. மனமொப்பிய எந்த இரு இந்துக்களும் மாலை மாற்றியோ, மோதிரம் அணிவித்தோ, தாலி கட்டியோ மணம் முடிக்கும் வாய்ப்பு உருவானது.
இதன்படி சடங்குகளற்று நடக்கும் திருமணத்துக்கு சுயமரியாதைத் திருமணம் என பெயர் சூட்டியது தமிழ்நாடு அரசு. எனவே, தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமண சட்டத்துக்கு கீழ் நடைபெற்ற திருமணங்களுக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொருந்தாது. தமிழ்நாட்டின் திருமணங்களை எந்த சடங்கும் தீயும் தீர்மானிக்கவோ தடுக்கவோ முடியாது”என்று கூறியுள்ளார்.